தங்கவயலில் திருக்குறள் மாநாடு தமிழ் சங்க தலைவர் அழைப்பு
தங்கவயலில் திருக்குறள் மாநாடு தமிழ் சங்க தலைவர் அழைப்பு
தங்கவயலில் திருக்குறள் மாநாடு தமிழ் சங்க தலைவர் அழைப்பு
ADDED : பிப் 12, 2024 06:41 AM

தங்கவயல்: ''தங்கவயலில் சித்திரை திருநாளன்று திருக்குறள் மாநாடு, திருக்குறளின் பெருமையை போற்றும் வகையில் நடத்தப்படும்,'' என்று தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் தெரிவித்தார்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசனுக்கு, 'கர்நாடக தமிழ் ஆளுமை விருது' வழங்கப்பட்டது.
இதில், கலையரசன் பேசியதாவது:
தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும். இது நம் தாய்க்கு செய்யும் சேவை. கர்நாடகாவில் முதன் முதலாக, பல நெருக்கடிகளை தாண்டி, தங்கவயலில் தான் திருவள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது.
உலகம் முழுதும் தமிழும், தமிழரும், தமிழிலக்கியமும் வாழ்வாங்கு வாழ்கிறது. ஐ.நா., முன் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும் என்று அனைவரும் கோர வேண்டும். தமிழக அரசும் அக்கறை செலுத்த வேண்டும்.
தங்கவயல் தமிழ் வாழும் நகரம். தமிழ் இளைஞர்கள் மத்தியில் தாய்மொழி தமிழ்ப் பற்றை ஊக்கப்படுத்துவோம். தாய்மொழி கல்வியின் அவசியத்தை மீண்டும் உணர்த்த வேண்டும்.
சித்திரை திருநாளை முன்னிட்டு ஏப்ரல் 13, 14 ஆகிய இரு நாட்கள் 'திருக்குறள் மாநாடு' தங்கவயலில் நடத்தப்படும். திருக்குறள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளை மையமாக வைத்து பல இலக்கிய நுால்கள் பல மொழிகளில் வந்துள்ளன. இத்தகைய எழுத்தாளர்கள் கவுரவிக்கப்படுவர்.
தமிழக, கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழறிஞர்கள் பங்கேற்பர். தமிழர், தமிழிலக்கிய நலம் விரும்புவோர் சங்கமிக்கும் மாநாடாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, துணைத் தலைவர் தீபம் சுப்பிரமணியம், பொருளாளர் நடராஜன், வக்கீல் ஜோதிபாசு, தி.மு.க., பிரமுகர் அறிவழகன், திருமுருகன் கருணாகரன், நாம் தமிழர் இலக்கிய பேரவையின் கோவலன், அகஸ்டின், அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசனுக்கு, 'கர்நாடக தமிழ் ஆளுமை விருது' வழங்கப்பட்டது. இடம்: தமிழ்ச் சங்கம், தங்கவயல்.