Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உலகம் முழுதும் 'விண்டோஸ்' இயங்குதளம் முடங்கியது!

உலகம் முழுதும் 'விண்டோஸ்' இயங்குதளம் முடங்கியது!

உலகம் முழுதும் 'விண்டோஸ்' இயங்குதளம் முடங்கியது!

உலகம் முழுதும் 'விண்டோஸ்' இயங்குதளம் முடங்கியது!

ADDED : ஜூலை 20, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
பிராங்க்பர்ட் : 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின், 'விண்டோஸ் - 10,11' இயங்குதளங்கள் நேற்று முடங்கியதால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விமான புறப்பாடு, வங்கி பரிவர்த்தனைகள், மருத்துவ சிகிச்சைகள், செய்தி ஒளிபரப்புகள் பல மணி நேரம் முற்றிலுமாக முடங்கின. 'இது, 'சைபர்' தாக்குதல் அல்ல; மென்பொருள், 'அப்டேட்' செய்கையில் ஏற்பட்ட தவறே இந்த கோளாறுக்கு காரணம்' என, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தை, உலகம் முழுதும் உள்ள பல்வேறு துறைகளும் பயன்படுத்தி வருகின்றன.

விமான போக்குவரத்தில் துவங்கி, தொலைக்காட்சி ஒளிபரப்பு வரை இந்த இயங்குதளத்தை நம்பியே செயல்பட்டு வருகின்றன.

நேற்று காலையில், விண்டோஸ் இயங்குதளத்தை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் கணினி திரையில், 'ப்ளூ ஸ்க்ரீன் எரர்' என்ற தகவல் ஒளிர்ந்தது.

தவிப்பு


'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, 'ரீஸ்டார்ட்' செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின், 'ரீஸ்டார்ட்' செய்வோம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், கணினிகளை தொடர்ந்து இயக்க முடியாமல் பயனர்கள் தவித்தனர். உலகம் முழுதும் உள்ள விமான நிலையங்களில் 'போர்டிங் பாஸ்' மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பணியாளர்கள் தவித்தனர்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் பயணியர் வரிசைகட்டி நின்றனர். நுாற்றுக்கணக்கான விமானங்களுக்கு ஒரே நேரத்தில் கணினி உதவியின்றி பணியாளர்கள் கைகளால் எழுதி 'போர்டிங் பாஸ்' வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுதும் 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கர்நாடகாவின் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, 90 சதவீத விமானங்கள் இயக்கப்படவில்லை.

மருத்துவமனைகளில் டாக்டர்கள் அப்பாயின்ட்மென்ட் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்றைய தினம் திட்டமிடப்பட்டு இருந்த அறுவை சிசிச்சைகள் தாமதமாக நடந்தன.

வங்கிகளில் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. பங்கு சந்தை வர்த்தகம் பல நாடுகளில் முடங்கின. ஏபிசி, ஸ்கை நியூஸ் உள்ளிட்ட காட்சி ஊடகங்களின் ஒளிபரப்பு பல மணிநேரம் தடைபட்டது.

குளறுபடி


இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், 'மைக்ரோசாப்ட் அல்லது விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்னை இல்லை. 'கிரவுட்ஸ்ட்ரைக்' அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களே குளறுபடிக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கிரவுட்ஸ்ட்ரைக் நிறுவனர் ஜார்ஜ் கர்ட்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 'இது சைபர் தாக்குதல் கிடையாது. இந்த பிரச்னையை சரிசெய்ய முயற்சித்து வருகிறோம்.

'வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம். நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பயனர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'மைக்ரோசாப்ட் சிக்கல் தொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது.சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு, விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

'எனினும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.

பங்கு சந்தையிலும்...


மைக்ரோசாப்ட் 'விண்டோஸ் 10' மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னையால், நேற்று விமான சேவைகள், தகவல்தொழில்நுட்ப சேவைகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்தன. இந்திய பங்கு சந்தையிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது.

பெரியளவில் பாதிப்பு இல்லை எனினும், நேற்று பிற்பகல் வர்த்தக நேரத்தின் போது, 'ஏஞ்சல் ஒன், 5 பைசா, ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டிஸ், மோதிலால் ஆஸ்வால்' உட்பட பல தரகு நிறுவனங்களின் செயலிகள், சிறிது நேரம் சரிவர இயங்கவில்லை.

இதனால் முதலீட்டாளர்கள் செய்வதறியாமல் திகைத்து போயினர். வங்கிகளை பொறுத்தவரை, 10 வங்கிகளின் சேவை பாதிக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் விமானங்கள் ரத்து

நம் நாட்டின் விமான சேவையை பொறுத்தவரை, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களின் சார்பில், சென்னை, டில்லி, மும்பை, ஹைதராபாத், கோல்கட்டா உள்ளிட்ட விமான நிலையங்களில் உள்ள, 'செக் இன்' கவுன்டர்களின் கணினிகள் இயங்கவில்லை.இதனால், விமானம் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.சென்னை விமான நிலைய கவுன்டர்கள் முடங்கியதால், பயணிகளுக்கு, 'கியூ.ஆர்., கோடு' வாயிலாக, ஒரு சில வினாடிகளில் வழங்க வேண்டிய போர்டிங் பாஸ், தகவல்களை சரிபார்த்து, விமான நிலைய ஊழியர்கள் கையால் எழுதி தந்தனர். இதனால், பயணியர் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், விமானங்களின் சேவை நேரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.மேலும், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய லக்னோ, பெங்களூரு, திருவனந்தபுரம், கோல்கட்டா, பாட்னா, சில்குரி, ஹைதராபாத், கோவை, மதுரை, திருச்சி, துாத்துக்குடி, டில்லி மதுரை.பெங்களூரு மற்றும் மலேஷியா செல்லும் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் என, 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாயின.இந்த தாமதத்தால் இண்டிகோ விமான நிறுவனத்தின் டில்லி - சென்னை, சென்னை - டில்லி - சென்னை - மங்களூரு, ஹைதராபாத், மதுரை என, பல நகரங்களுக்கும் செல்ல வேண்டிய 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.ஐ.டி., தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறியதாவது:பொதுவாக ஐ.டி., துறையில் இதுபோன்று சிறிய தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு நீங்கி விடும். அதுபோலத்தான் இந்த பிரச்னை என நினைத்திருந்தோம். ஆனால் உலகம் முழுதும் சிக்கலாகி இருப்பது, தொழில்நுட்பம் சார்ந்த பல துறைகளை பாதிப்படைய வைத்துள்ளது. உலகின் முதன்மையான 'ஐ.டி., ஹப்'பாக இந்தியா உள்ளது. இதுபோன்ற திடீர் தொழில்நுட்ப கோளாறு ஒட்டுமொத்த ஐ.டி., துறையையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.மாணவர்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாப்ட்வேர் மற்றும் பல சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். வரும் காலத்தில் இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.விமான நிலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட அப்டேட் பிரச்னையால் மட்டுமே, இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய ஆணையம் சார்பில் இயங்கும் கணிணிகள் வழக்கம் போல் இயங்குகின்றன.'சில விமான நிறுவனங்களின் கவுன்டர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னைகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன. வழக்கம் போல விமான சேவை துவங்கும்' என்றனர்.



'கிரவுட்ஸ்ட்ரைக்' என்றால் என்ன?

கிரவுட்ஸ்ட்ரைக் என்பது சைபர் செக்யூரிட்டி நிறுவனம். கிளவுட் அடிப்படையில் பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குகிறது. விண்டோஸ் மென்பொருளின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், இந்த நிறுவனம் கைகோர்த்துள்ளது.அதன்படி, நிகழ் நேரத்தில் பாதுகாப்பு சிக்கல்களை கிளவுட் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இந்த நிறுவனம் தீர்வுகளை வழங்குகிறது. இந்நிலையில், இந்த கிரவுட்ஸ்ட்ரைக் சமீபத்தில் செய்த சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட தவறு காரணமாக உலகம் முழுதும் விண்டோஸ் சேவை முடங்கியது. மேக், லினக்ஸ் இயங்குதளங்களில் எந்த பிரச்னையும் இன்றி இந்த அப்டேட் இயங்கியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us