மலையேற்றம் செல்ல தற்காலிக தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது
மலையேற்றம் செல்ல தற்காலிக தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது
மலையேற்றம் செல்ல தற்காலிக தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது
ADDED : ஜன 31, 2024 07:38 AM
பெங்களூரு : ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், மலையேற்றம் செல்ல, கர்நாடகா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கர்நாடகாவின் ராம்நகர், சிக்கமகளூரு, குடகு, தட்சிண கன்னடா உள்ளிட்ட சில மாவட்டங்களில், மலையேற்றம் செல்ல ஏற்ற இடங்கள் உள்ளன. மலையேற்றம் செல்வதற்கு, வனத்துறை அனுமதி பெறுவது அவசியம்.
சிலர் ஆன்லைன் மூலம், மலையேற்றம் செல்ல அனுமதி வாங்குகின்றனர். பெரும்பாலோனார் எந்த அனுமதியும் வாங்காமல் செல்கின்றனர். வனப்பகுதியில் மலையேற்றம் செல்லும்போது, வழிதவறிச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
கூடாரங்கள் அமைத்து...
இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், மலையேற்றம் செல்வதற்கு, கர்நாடகா வனத்துறை தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
இதுதொடர்பாக வெளியான உத்தரவு:
கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று, குமார பர்வதா மலைக்கு ஆயிரக்கணக்கானோர், மலையேற்றம் சென்று உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாயின. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை போட்டு வந்து உள்ளனர். சிலர் வனத்துறை அனுமதியின்றி மலையேற்றம் செல்லும் இடங்களில், கூடாரங்கள் அமைத்து தங்குகின்றனர்.
பெரும் சவால்
இதனால் வனவிலங்குகளுக்கு தொந்தரவு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் கவலைகளை அரசிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.
மலையேற்றம் செல்வதற்கு வாரந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருவதால், அவர்களை கட்டுப்படுத்துவதும், அவர்களின் உடைமைகளை சோதனை செய்வதும், வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதனால் மலையேற்றம் செல்வதற்கு, அரசு புதிய திட்டம் வகுக்க உள்ளது. அதுவரை ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல், மலையேற்றம் செல்ல தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தடை நாளை முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.