கேட்ட வரம் அளிக்கும் கப்பாடி திருத்தலம்
கேட்ட வரம் அளிக்கும் கப்பாடி திருத்தலம்
கேட்ட வரம் அளிக்கும் கப்பாடி திருத்தலம்
ADDED : ஜன 11, 2024 11:46 PM

கர்நாடக அரசு, 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய பின், கோவில்களுக்கு செல்லும் பெண்கள் பட்டாளம் அதிகரித்துள்ளது. பலரும் தங்களின் குடும்பம் மற்றும் மகளிர் சங்கங்களுடன், ஏற்கனவே பிரசித்தி பெற்ற கோவில்களை சுற்றி வந்துள்ளனர். இப்போதும் கூட, கோவில்களுக்கு செல்லும் பெண்களின் கூட்டம் குறையவில்லை.
வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவித்து, மனம் வெறுத்த மக்கள், தங்கள் கஷ்டம் விலகி சுபிக்ஷமாக வாழ விரும்பினால், கப்பாடி திருத்தலத்துக்கு வாருங்கள். பலருக்கு இந்த திருத்தலத்தை பற்றி தெரிந்திருக்கலாம்.
மைசூரு, கே.ஆர்.நகரின், ஹெப்பாளுவில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் கப்பாடி திருத்தலம் அமைந்துள்ளது. கே.ஆர்.நகரில் இருந்து, திருத்தலத்துக்கு வர வாகன வசதி உள்ளது. இங்குள்ள உரிகன்னா ராச்சப்பாஜி, சென்னம்மாஜி கடவுள் முன் நின்று, பக்தியுடன் வேண்டினால் கேட்டதை கொடுப்பதே, இந்த திருத்தலத்தின் மகிமையாகும். கேட்ட வரம் கிடைப்பதால், இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
மற்ற திருத்தலங்களுடன் ஒப்பிட்டால், கப்பாடி மிகவும் மாறுபட்டதாகும். இங்கு விக்ரகங்கள் ஏதும் இல்லை. உரிகன்னா ராச்சப்பாஜி, சென்னம்மாஜியின் மணி மண்டபங்கள் உள்ளன. இதை தரிசனம் செய்து, பூஜித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும்படி பக்தர்கள் பிரார்த்திப்பது சம்பிரதாயமாகும். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
கப்பாடியில் உள்ள கடவுளின் மகிமைகள், செய்துள்ள அற்புதங்கள் ஏராளம். இலக்கியவாதி கம்சாளே என்பவர் எழுதிய காவியத்தில், கப்பாடி திருத்தலத்தின் கடவுள் மகிமைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
சொத்து விவாதம், வழக்குகள், குடும்பத்தில் கருத்து வேறுபாட்டால் பிரச்னை ஏற்படும் போது, ராச்சப்பாஜி மீது சத்திய பிரமாணம் செய்வர்.
அப்படி செய்தால் நீண்ட நாள் வழக்கு முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி ஏற்பட்டதற்கான உதாரணங்கள் உள்ளன. மைசூரு அரசரால் பூஜிக்கப்பட்ட அண்ணன், தங்கையான ராச்சப்பாஜி, சென்னம்மாஜி அடர்ந்த கானகத்தில், காவிரி ஆற்றங்கரையில் குடி கொண்டதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கப்பாடி திருத்தலம் குறித்து, பல கதைகள் மக்களிடையே கூறப்படுகின்றன. திருத்தலத்தின் மகிமை குறித்து கேள்விபட்டு, பக்தர்கள் வருகின்றனர். கோழி, ஆடுகளை காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்கின்றனர்
- நமது நிருபர் -.