இட ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டுதல் யு.ஜி.சி., இணையதளத்தில் இருந்து நீக்கம்
இட ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டுதல் யு.ஜி.சி., இணையதளத்தில் இருந்து நீக்கம்
இட ஒதுக்கீடு தொடர்பான வழிகாட்டுதல் யு.ஜி.சி., இணையதளத்தில் இருந்து நீக்கம்
UPDATED : ஜன 31, 2024 10:39 AM
ADDED : ஜன 31, 2024 04:51 AM

புதுடில்லி : மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர, எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவுகளை சேர்ந்தவர்கள் போதிய அளவில் விண்ணப்பிக்கவில்லை எனில், அவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு நீக்கப்படும் என, இணையதளத்தில் யு.ஜி.சி., வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் இணையதளத்தில், கடந்த 28ல் வரைவு வழிகாட்டுதல் பரிந்துரை வெளியிடப்பட்டது. அதில், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான ஆசிரியர் பணியிடத்துக்கு போதிய அளவில் விண்ணப்பங்கள் வரவில்லை எனில், அந்த இடங்கள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., அரசு இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதிலேயே குறியாக இருப்பதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டினார்.
இதை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மறுத்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6,080 பணியிடங்கள் நிரப்பப்பட்டள்ளன. எஸ்.சி., பிரிவில் 14.3 சதவீதமும், எஸ்.டி., பிரிவில் 7 சதவீதமும், ஓ.பி.சி., பிரிவில் 23.42 சதவீத பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அதிகப்பட்ச இடங்கள் முறையாக நிரப்பப்பட்டுள்ளன. இதில், இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதாக கூறுவதற்கு இடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த வரைவு வழிகாட்டுதல் பரிந்துரை நேற்று அதிரடியாக நீக்கப்பட்டது.
''சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் கருத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், வழிகாட்டுதல்கள் இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன,'' என, யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று தெரிவித்தார்.