குடிநீர் மையங்களை நிர்வகிக்க டெண்டர் கோரியது மாநகராட்சி
குடிநீர் மையங்களை நிர்வகிக்க டெண்டர் கோரியது மாநகராட்சி
குடிநீர் மையங்களை நிர்வகிக்க டெண்டர் கோரியது மாநகராட்சி
ADDED : ஜன 11, 2024 03:51 AM
பெங்களூரு: அரசின் நிதியுதவியில் கட்டப்பட்ட, சுத்தமான குடிநீர் மையங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்கள், தொண்டர்களுக்கு கடிவாளம் போட, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரின் பல இடங்களில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், சுத்த குடிநீர் மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றினால் மாநகராட்சிக்கு, 1 ரூபாய் வருவாய் கிடைக்கவில்லை. இந்த மையங்களை நிர்வகிப்பு பெயரில், அரசியல் தலைவர்களின் ஆதரவாளர்கள், வெவ்வேறு கட்சிகளின் தொண்டர்கள், பணம் சம்பாதிக்கின்றனர்.
குடிநீருக்காக மக்கள் செலுத்தும் பணத்தில், மின்சார பில் கட்டிவிட்டு, மிச்ச பணத்தை சுத்த குடிநீர் மையங்களை நிர்வகிப்போர் எடுத்துக் கொள்கின்றனர். இந்த மையங்களை சரியாக நிர்வகிப்பதும் இல்லை. நிர்ணயித்த காலத்தில் பில்டர்களை மாற்றுவதில்லை என, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதை தீவிரமாக கருதிய, பெங்களூரு மாநகராட்சி, சுத்த குடிநீர் மையங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர, முடிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வமாக நிர்வகிப்பாளர்களை நியமித்து, வருவாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக டெண்டர் கோரியுள்ளது.
மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
பெங்களூரின் அனைத்து சுத்த குடிநீர் மையங்களை நிர்வகிக்க டெண்டர் அழைத்துள்ளோம். ஏற்கனவே ஆர்.ஆர்., நகர் மண்டலத்தில் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகரில் 500க்கும் மேற்பட்ட சுத்த குடிநீர் மையங்கள் உள்ளன. இவற்றில் இருந்து, மாதந்தோறும் 1.5 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
ராஜாஜி நகர் மண்டலத்தின், 153 சுத்த குடிநீர் மையங்களை நிர்வகிக்க, டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவானால், மாநகராட்சிக்கு மாதந்தோறும் 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். எலஹங்கா உட்பட, அனைத்து மண்டலங்களிலும் டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.