பல்லாரி மாநகராட்சி மேயர் பதவி வியூகம் வகுத்து கைப்பற்றிய காங்.,
பல்லாரி மாநகராட்சி மேயர் பதவி வியூகம் வகுத்து கைப்பற்றிய காங்.,
பல்லாரி மாநகராட்சி மேயர் பதவி வியூகம் வகுத்து கைப்பற்றிய காங்.,
ADDED : ஜன 11, 2024 03:40 AM

பல்லாரி: காங்கிரஸ் உட்கட்சி பூசலால், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பல்லாரி மாநகராட்சி மேயர் தேர்தலில், காங்., ஸ்வேதா, 22வது மேயராக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ., வலையில் சிக்காமல், வியூகம் வகுத்து காங்கிரஸ் கைப்பற்றியது.
பல்லாரி மாநகராட்சியில் மொத்தம், 39 வார்டுகள் உள்ளன. இதில், 21 வார்டுகளில் காங்கிரஸ், 13 வார்டுகளில் பா.ஜ., 5 வார்டுகளில் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேயராக இருந்த காங்கிரசின் திரிவேணி, கடந்தாண்டு நவம்பர் 4ம் தேதி, பதவியை ராஜினாமா செய்தார். புதிய மேயர் பதவிக்கு காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி நிலவியது.
காங்கிரஸ் உட்கட்சி பூசல் காரணமாக, நவம்பர் 21, டிசம்பர் 19ல் நடக்கவிருந்த மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பல்லாரி மாநகராட்சி கவுன்சில் அரங்கில், நேற்று மேயர் தேர்தல் நடந்தது. மேயர் பதவி, எஸ்.சி., பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஸ்வேதா, குபேரா, சுயேச்சை கவுன்சிலர் மிஞ்சு சீனிவாஸ், பா.ஜ., கவுன்சிலர் ஹனுமந்தப்பா ஆகிய நான்கு பேர், வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இறுதி கட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சர் நாகேந்திராவின் தீவிர முயற்சியால், குபேரா, மிஞ்சு சீனிவாஸ் ஆகியோர், வேட்பு மனுவை திரும்ப பெற்றனர்.
இறுதியில் கை உயர்த்துவதன் மூலம், ஓட்டெடுப்பு நடந்தது. அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், கவுன்சிலர்கள், சுயேச்சை உட்பட 29 ஓட்டுகளுடன், காங்கிரசின் ஸ்வேதா, 22வது மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ.,வின் ஒரு கவுன்சிலர் ஆப்சென்ட் ஆனதால், ஹனுமந்தப்பா, 12 ஓட்டுகள் பெற்று, தோல்வி அடைந்தார். காங்கிரஸ் உட்கட்சி பூசலை பயன்படுத்தி, மேயர் பதவியை கைப்பற்ற நினைத்த பா.ஜ.,வுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.