நான்கு இன்ஜின் சாதனைகள் பட்டியலிட்டார் முதல்வர்
நான்கு இன்ஜின் சாதனைகள் பட்டியலிட்டார் முதல்வர்
நான்கு இன்ஜின் சாதனைகள் பட்டியலிட்டார் முதல்வர்
ADDED : மே 27, 2025 09:16 PM
பிரகதி மைதான்:“பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நான்கு இன்ஜின் அரசு, 'வளர்ச்சி, நம்பிக்கை, தேசத்திற்கு முன்னுரிமை' என்ற உணர்வை உயிர்ப்பித்துள்ளது,” என, ஆம் ஆத்மியின் விமர்சனத்திற்கு முதல்வர் ரேகா குப்தா பதிலடி கொடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டுகால ஆட்சி சாதனை, துணைநிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவு, முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., அரசு பதவியேற்று 100 நாள் ஆட்சியின் சாதனைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாரத் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, முதல்வர் ரேகா குப்தா மற்றும் மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.
டில்லியின் துணைநிலை கவர்னராக வி.கே.சக்சேனா, 2022 மே 26ல் பொறுப்பேற்றார். அன்று முதல் அப்போதைய ஆம் ஆத்மி அரசுடன் பல்வேறு அரசியல், நிர்வாக மோதல்களை சக்சேனா எதிர்கொள்ள நேரிட்டது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு மற்றும் சக்சேனாவின் பணிக்கால சாதனைகளை பட்டியலிட்டு முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நான்கு இன்ஜின் அரசு, 'வளர்ச்சி, நம்பிக்கை, தேசத்திற்கு முன்னுரிமை' என்ற உணர்வை உயிர்ப்பித்துள்ளது.
தலைநகர் வளர்ச்சியின் உயர் நிலைக்கு மாறிவருகிறது. தலைநகரின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் இந்த நாள், வரலாற்றில் இடம்பெறுவதை குறிக்கிறது.
மோடியின் திறமையான தலைமை, இந்தியாவை ஒரு தேசமாக வலுப்படுத்தியது மட்டுமல்லாமல், ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட பணிகள் மூலம், நம் குடிமக்களின் கண்ணியத்தையும் வாழ்க்கையையும் பாதுகாக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது.
நிர்வாக சீர்திருத்தம், வெளிப்படைத்தன்மைக்கான வலுவான அடித்தளத்தை துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் மூன்றாண்டு பணிக்காலம் அமைந்திருந்தது.
யமுனை நதி புத்துயிர் பெறுதல், சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை என் தலைமையிலான அரசு சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மழை வெள்ளம் தேக்கம், தனியார் பள்ளிகளால் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட போன்ற பல்வேறு பிரச்னைகளை மேற்கோள் காட்டி, டில்லியில் பா.ஜ.,வின் நான்கு இன்ஜின் அரசாங்கம் முடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைமை விமர்சனம் செய்திருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் ரேகா குப்தா நேற்றைய நிகழ்ச்சியில் நான்கு இன்ஜின் சாதனைகளை பட்டியலிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.