ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்
ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்
ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2025 12:19 AM

புதுடில்லி: 'ரஷ்ய ராணுவத்தில் இணைவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது ஆபத்து நிறைந்த பாதை' என, வெளியுறவு அமைச்சகம் மீண்டும் எச்சரித்துள்ளது.
'நேட்டோ' அமைப்பில் சேர, உக்ரைன் எடுத்த முயற்சி, ரஷ்யாவை கோபம் அடைய செய்தது.
இது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறிய ரஷ்யா, 2022, பிப்ரவரியில், உக்ரைன் மீது முழு அளவிலான போரை துவங்கியது.
ரஷ்யா அழைப்பு கடந்த மூன்று ஆண்டு களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.
இதனால், ராணுவத்தில் ஏற்பட்டிருக்கும் ஆள் பற்றாக்குறையை போக்க, பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்காக தாராள சலுகைகளை அறிவித்ததால், இந்தியர்கள் சிலரும் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் போரில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கக்கூடாது என, மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளி யுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
ரஷ்ய ராணுவத்தில், இந்தியர்கள் சிலர் சேர்ந்திருப்பதாக அரசுக்கு அறிக்கை வந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து, ரஷ்ய அதிகாரி களிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்.
உக்ரைன் போருக்காக இந்தியர்களை பணியமர்த்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
போர்க்களத்தில் இருப்பவர்களை உடனடியாக திரும்ப அழைத்து, இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவித்துள்ளோம். ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்தால் பல சலுகைகள் கிடைக்கும் என்ற அறிவிப்புகளை இந்தியர்கள் யாரும் ஏற்க வேண்டாம்.
ஏனெனில், அது ஆபத்தான பாதை. தவிர, வேலைவாய்ப்பு என்ற பெயரில் பல மோசடிகளும் நடக்கின்றன. எனவே, ரஷ்ய ராணுவத்தில் வேலைக்கு சேர்வதை, இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்ய ராணுவத்தில், மொத்தம் 127 இந்தியர்கள் இணைந்திருப்பதாக சமீபத்தில் வெளியுறவு அமைச்சகம் பார்லி.,யில் தெரிவித்திருந்தது. ராணுவப் பணியில் இந்தியர்களை சேர்க்கக் கூடாது என, மத்திய அரசு, ரஷ்ய அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
உத்தரவாதம் இதன் காரணமாக, ரஷ்ய ராணுவத்தில் இணைந்த 127 பேரில், 98 பேர், வேலையை உதறிவிட்டு, தாயகம் திரும்பிவிட்டனர். சிலர் மட்டும் ரஷ்ய ராணுவத்தில் இன்னும் தொடர்கின்றனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
மத்திய அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பில், இந்தியர்கள் தவிர்க்கப்படுவர் என, கடந்த ஆண்டு ரஷ்யாவும் உறுதியளித்தது. 2024, ஜூலையில், மாஸ்கோ சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்தித்த பின், இந்த உத்தரவாதம் அளிக்கப் பட்டது.