சொதப்பியது பவுலிங்.. லீட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி பரிதாப தோல்வி
சொதப்பியது பவுலிங்.. லீட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி பரிதாப தோல்வி
சொதப்பியது பவுலிங்.. லீட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி பரிதாப தோல்வி

வலுவான அடித்தளம்
நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. டக்கெட், கிராவ்லே விவேகமாக விளையாடினர். பும்ராவுக்கு எதிராக 'ரிஸ்க்' எடுக்க கூடாது; மற்ற இந்திய பவுலர்களை விளாச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதற்கு ஏற்ப மற்ற 'வேகங்கள்' ஆரம்பத்தில் தடுமாறினர். இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல், பவுண்டரி அருகே வந்து 'அட்வைஸ்' செய்யும் நிலை ஏற்பட்டது. ஜடேஜாவின் 'சுழலும்' எடுபடவில்லை. முக்கியமான முதல் 'செஷனில்' இங்கிலாந்து அணி ஓவருக்கு 4 ரன் வீதம் 96 ரன் எடுத்து, ஆதிக்கம் செலுத்தியது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 117/0 ரன் எடுத்திருந்தது.
ஜெய்ஸ்வால் 'மிஸ்'
இதற்கு பின் ஜடேஜா ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார் டக்கெட். சிராஜ் பந்தில் டக்கெட் (97 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' எல்லையில் இருந்து ஓடி வந்து பிடிக்க முற்பட்ட ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார். இது இந்த டெஸ்டில் ஜெய்ஸ்வால் 'மிஸ்' செய்த நான்காவது 'கேட்ச்'. ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய டக்கெட், டெஸ்டில் 6வது சதம் அடித்தார்.
நழுவிய 'ஹாட்ரிக்'
இங்கிலாந்து அணி 181/0 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 22 நிமிட தாமதத்திற்கு பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிரசித் கிருஷ்ணா 'வேகத்தில்' கிராவ்லே (65) அவுட்டானார். தொடர்ந்து அசத்திய கிருஷ்ணா பந்தில் போப் (8) போல்டானார். ஜடேஜா பந்தில் 'ஸ்விட்ச் ஹிட்' மூலம் சிக்சர் அடித்தார் டக்கெட். இந்த நேரத்தில் பந்துவீச வந்த ஷர்துல் தாகூர் (55வது ஓவர்) மிரட்டினார். 3வது பந்தில் டக்கெட்டை (149, 21x4, 1x6) அவுட்டாக்கினார். 4வது பந்தில் புரூக்கை (0) வெளியேற்றினார். அடுத்த பந்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் 3 ரன் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 269/4 ரன் எடுத்திருந்தது.
ஜோ ரூட் அரைசதம்
அனுபவ ஜோ ரூட், ஜேமி ஸ்மித் பொறுப்பாக ஆடினர். அரைசதம் கடந்த ரூட், அணியை கரை சேர்த்தார். ஜடேஜா ஓவரில் (82) ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஸ்மித், கடைசி பந்தையும் சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 373/5 ரன் எடுத்து வென்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ரூட் (53), ஸ்மித் (44) அவுட்டாகாமல் இருந்தனர்.