ஐ.நா., நிலையான வளர்ச்சி பட்டியல் 'டாப் - 100'ல் இடம்பிடித்தது இந்தியா
ஐ.நா., நிலையான வளர்ச்சி பட்டியல் 'டாப் - 100'ல் இடம்பிடித்தது இந்தியா
ஐ.நா., நிலையான வளர்ச்சி பட்டியல் 'டாப் - 100'ல் இடம்பிடித்தது இந்தியா
ADDED : ஜூன் 25, 2025 12:38 AM

புதுடில்லி : ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடையும் நாடுகளின் பட்டியலில் முதன்முறையாக, முதல் 100 இடங்களுக்குள் இந்தியா நுழைந்துள்ளது.
ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையால், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள், 2015ல் திட்டமிடப்பட்டன. இதில் வறுமை ஒழிப்பு, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, அமைதி, நீதி உட்பட 17 இலக்குகளை 2030ம் ஆண்டுக்குள் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை எட்டும் நிலையை, ஐ.நா., அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதன்படி இலக்கை நோக்கி முன்னேறும் நாடுகளை, ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தி வருகிறது. இதன்படி 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை, ஐ.நா., அமைப்பு நேற்று வெளியிட்டது.
மொத்தம் 193 நாடுகள் இடம்பெற்றுள்ள இப்பட்டியலில், இந்தியா, 67 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது.
ஐ.நா., தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள், முதன்முறையாக இந்தியா இடம்பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 109வது இடத்திலும், 2023ல் 112வது இடத்திலும் இந்தியா இடம்பிடித்திருந்தது.
நடப்பாண்டில் இந்த வரிசையில், நம் அண்டை நாடான சீனா, 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா, 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன.
இத்தரவரிசையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
நம் அண்டை நாடுகளான பூட்டான், 74வது இடத்தையும், நேபாளம், 85வது இடத்தையும், வங்கதேசம் 114வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும் பிடித்துஉள்ளன.
இதேபோல், கடல்சார் அண்டை நாடுகளான மாலத்தீவுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 53 மற்றும் 93வது இடங்களையும் பிடித்துள்ளன.