தலைமறைவான சோரன் திரும்பி வந்தார் : மனைவியை முதல்வராக்க திட்டம்?
தலைமறைவான சோரன் திரும்பி வந்தார் : மனைவியை முதல்வராக்க திட்டம்?
தலைமறைவான சோரன் திரும்பி வந்தார் : மனைவியை முதல்வராக்க திட்டம்?
UPDATED : ஜன 31, 2024 12:50 PM
ADDED : ஜன 31, 2024 01:33 AM

புதுடில்லி : நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் புதுடில்லி இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
14 பேர் கைது
கடந்த 24 மணி நேரமாக தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சி திரும்பினார். அவரிடம் இன்று விசாரணை நடக்கிறது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில், போலி ஆவணங்கள் வாயிலாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை, முதல்வர் ஹேமந்த் சோரன் அபகரித்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ஜார்க்கண்ட் மாநில சமூக நலத்துறை இயக்குனரும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சாவி ரஞ்சன் உட்பட 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறையினர், அவருக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லத்தில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது சோரன் வீட்டில் இல்லை. மொத்தம், 13 மணி நேரம் அவரது வீட்டில் இருந்த அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் ரொக்கம், பி.எம்.டபிள்யூ., - எஸ்.யு.வி., ரக கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த 24 மணி நேரமாக எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தலைமறைவாக இருந்த சோரன், நேற்று ராஞ்சியில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பினார்.
மனைவிக்கு பதவி?
கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை அழைத்து அவசர ஆலோனை கூட்டம் நடத்தினார். அப்போது, தான் கைது செய்யப்பட்டால், தன் மனைவி கல்பனாவை முதல்வராக்குவது குறித்த விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் இன்று மதியம் 1:00 மணிக்கு விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.