ADDED : பிப் 12, 2024 06:27 AM
ஏ.டி.எம்., எங்கே?
கோல்டு சிட்டியில் ரா.பேட்டை, ஆ.பேட்டையில் மட்டுமே ஏ.டி.எம்., உள்ளது. ஆனால் கோரமண்டல், உரிகம், சாம்பியன், மாரிகுப்பம் பகுதியினர் ஏ.டி.எம்., ஐ தேடி பல கி.மீ., அலைய வேண்டியுள்ளது. ரயில் நிலையங்களிலாவது அமைத்திருக்கலாம்.
கோல்டு சிட்டியில் பெரும்பாலான ஏ.டி.எம்.,களில் வெறும் 500 நோட்டுகள் மட்டுமே இருப்பதாக போர்டு வைத்ததுள்ளனர். இதனால் 100, 200 ரூபாயை எடுக்க வருவோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதிலும், பண்டிகை காலத்தில் 'பணமே இல்லை' என்பது வழக்கமாகி விட்டது.
பல கிராமங்களில் கூட வங்கிகள், அதன் ஏ.டி.எம்.,கள் இருக்கும் போது, பெத்த பேரு உள்ள சிட்டியில், ஏ.டி.எம்., கிளையை எங்கே போய் தேடுவதோ.
கிடைக்குமா குடிநீர்?
நுாறாண்டுகளுக்கு முன் நந்தி மலையில் பிறக்கும் தென் பெண்ணை பாலாற்று நீரை, பேத்தமங்களா ஏரியில் தேக்கி, அதனை சுத்திகரிப்பு செய்து, கோல்டு சிட்டிக்கு குடிநீராக வழங்கினாங்க. இங்கிலீஷ் காரங்க வெளியேறிய பின், இந்த தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் உறிஞ்சியவங்க ஏராளம்.
இதுபோன்ற குடிநீரை கோல்டு சிட்டிக்கு மீண்டும் எப்போது வீடு தோறும் வழங்க போறாங்களோ.
தங்கவயலுக்கு தற்போது வரையில் குடிநீருக்கென நிரந்தர திட்டம் இல்லை. காவிரி பாயுது; கிருஷ்ணா ஓடுது; எரகோள் தேங்குது. ஆனா, கோல்டு சிட்டி தேம்புறதை யாரும் கண்டுக்கலயே.
சுகாதாரம் கெடாமல், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல், 100 சதவீத உத்தரவாதத்துக்கு பின் தண்ணீர் எப்போ வரப்போகுதோ.