Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பீஹார் தேர்தல் 'இண்டி' கூட்டணி முதல்வர் வேட்பாளர் தன் பெயரை சூசகமாக அறிவித்த தேஜஸ்வி

பீஹார் தேர்தல் 'இண்டி' கூட்டணி முதல்வர் வேட்பாளர் தன் பெயரை சூசகமாக அறிவித்த தேஜஸ்வி

பீஹார் தேர்தல் 'இண்டி' கூட்டணி முதல்வர் வேட்பாளர் தன் பெயரை சூசகமாக அறிவித்த தேஜஸ்வி

பீஹார் தேர்தல் 'இண்டி' கூட்டணி முதல்வர் வேட்பாளர் தன் பெயரை சூசகமாக அறிவித்த தேஜஸ்வி

ADDED : செப் 01, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
பாட்னா: பீஹாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி தன் பெயரை நேற்று சூசகமாக அறிவித்தார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.

இதற்காக, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டசபை தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், ஓட்டுத் திருட்டு நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதைக் கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், பீஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரையை கடந்த 17ல் துவக்கினார்.

மாநிலத்தின் முக்கிய நகரங்களில் செல்லும் இந்த யாத்திரையில், 'இண்டி' கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த யாத்திரை, அரா பகுதியில் நேற்று நடந்தது.

கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

பீஹாரில் போலி அரசு தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. நமக்கு தேவை உண்மையான அரசு. போலியான முதல்வர் நமக்கு தேவையில்லை. உண்மை முதல்வரே நமக்கு வேண்டும்.

பீஹார் மக்களும் இதை தான் விரும்புகின்றனர். எதிர்க்கட்சியின் முகமாக நான் இருக்கிறேன். தேஜஸ்வியாகிய நான் உங்கள் முன் இருக்கிறேன். மக்களுக்கான அரசு என் பின்னால் இருக்கிறது-.

ஓட்டு திருட்டில் ஈடுபட்டுள்ள பா.ஜ., எங்கள் கூட்டணியை பார்த்து பயப்படுகிறது. அதனால் தான், ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறது.

பீஹார் வளர்ச்சிக்கு இன்னும் நிறைய திட்டங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பின், இது குறித்து விளக்கமாக தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பேசிய உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவும், ''அடுத்ததாக பீஹாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆட்சி அமையும்,'' என்றார்.

முந்தைய கூட்டத்தில், பீஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு ராகுல் மழுப்பலாக பதிலளித்தார்.

இந்த சூழலில், ராகுல் முன்னிலையில், தன்னைத் தானே முதல்வர் வேட்பாளர் என, தேஜஸ்வி யாதவ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் தனித்து போட்டி

பீஹார் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இரு தினங்களாக ஆலோசனை நடத்தினார். பின், இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர், 'பீஹாரில் அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடும். 'வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அடுத்த மாதம், துவக்கத்தில், தேர்தல் பிரசாரங்களை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பீஹார் தொகுதிகளை மூன்று மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பொறுப்பாளராக கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்' என, தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us