Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சண்டிகர் மேயர் தேர்தலில் திருப்பம் தோல்வியை தழுவியது 'இண்டியா' அணி

சண்டிகர் மேயர் தேர்தலில் திருப்பம் தோல்வியை தழுவியது 'இண்டியா' அணி

சண்டிகர் மேயர் தேர்தலில் திருப்பம் தோல்வியை தழுவியது 'இண்டியா' அணி

சண்டிகர் மேயர் தேர்தலில் திருப்பம் தோல்வியை தழுவியது 'இண்டியா' அணி

ADDED : ஜன 31, 2024 02:12 AM


Google News
Latest Tamil News
சண்டிகர், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணி வெற்றி உறுதி என்று அனைவருமே நம்பியிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரம் சண்டிகர். இதன் மாநகராட்சி மன்றத்தில் மொத்தம் 35 உறுப்பினர்கள். பா.ஜ., 14, ஆம் ஆத்மி 13, காங்கிரஸ் 7, அகாலி தளம் 1.

மூன்று பெரிய கட்சிகளும் ஒருவரை ஒருவர் எதிரியாக கருதியதால் யாரும் யாருடனும் கூட்டு சேரவில்லை. ஆகவே, அதிக உறுப்பினர்களை கொண்ட பா.ஜ., தொடர்ந்து மேயர் பதவியை கைப்பற்றி வந்தது.

கோர்ட் உத்தரவு


ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் பா.ஜ., மேயரே பதவியில் நீடித்தார். இதை எதிர்த்து ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. ஜனவரி 18ல் தேர்தல் நடத்த கோர்ட் ஆணையிட்டது.

அன்று ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு, “எனக்கு உடம்பு சரியில்லை” என்று கூறிவிட்டு, தேர்தல் அதிகாரி வீட்டுக்கு போய்விட்டார். ஆம் ஆத்மி மீண்டும் கோர்ட்டுக்கு போனது. 30ம் தேதி நடத்தியாக வேண்டும் என கோர்ட் கட்டளை இட்டது. அதன்படி நேற்று தேர்தல் நடந்தது.

எதிரும் புதிருமாக அரசியல் செய்யும் ஆம் ஆத்மியும் காங்கிரசும் முதல் முறையாக இண்டியா அணி என்ற பேனரின் கீழ் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலை சந்தித்தன. மேயர் பதவி ஆம் ஆத்மிக்கு,2 துணை மேயர் பதவிகள் காங்கிரசுக்கு என ஒப்பந்தம் செய்து கொண்டன.

இரு கட்சிகளுக்குமாக மொத்தம் 20 ஓட்டுகள் நிச்சயம் என்பதால், 14 ஓட்டு மட்டுமே வைத்துள்ள பா.ஜ. ஜெயிக்க வாய்ப்பு இல்லை. எனவே, போட்டியே வராது என கருதின. ஆனால் பா.ஜ., களத்தில் இறங்கியது.

“இந்த தேர்தலில் பா.ஜ., படுதோல்வி அடையும்; இண்டியா கூட்டணியின் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு சண்டிகர் மேயர் தேர்தல் பிள்ளையார் சுழி போடும்” என இரு கட்சிகளும் கோரசாக சொல்லி வந்தன. ஆனால், கிளைமாக்சில் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.

''பா.ஜ., வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் 12 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். 8 ஓட்டுகள் செல்லாதவை” என அறிவித்து விட்டு தேர்தல் அதிகாரி கிளம்பி விட்டார்.

போட்டியே இல்லை


செல்லாது என அதிகாரி அறிவித்த எட்டு ஓட்டுகளும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் போட்டவை. பா.ஜ.,வுக்கு கிடைத்த 2 கூடுதல் ஓட்டுகளில் ஒன்று அகாலி தளம் உறுப்பினர் போட்டது; மற்றொன்று, மாநகராட்சியின் அலுவல் அல்லாத உறுப்பினரான சண்டிகர் பா.ஜ., எம்.பி., கிரோன் கெர் போட்ட ஓட்டு.

ஆம் ஆத்மி, காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றபோதே துணை மேயர்கள் பதவிக்கான தேர்தல் நடந்தது.

வெற்றி பெற்ற மேயரே நடத்திய அந்த தேர்தலில் பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியில்லாமல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஓப்பன் சீட்டிங்: கெஜ்ரிவால் குமுறல்

ஆம் ஆத்மி நிறுவனர் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: பா.ஜ., பகிரங்கமாக பெரும் ஏமாற்றுவேலை செய்துள்ளது. இதற்கே இப்படி என்றால், லோக்சபா தேர்தலில் இன்னும் என்னென்ன செய்வார்களோ? தேர்தல் வரும், போகும். கட்சிகளும் வரும், போகும். ஆனால், ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும்.



பா.ஜ., வெற்றி பெற்றது எப்படி?

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தா: மொத்தமுள்ள 36 ஓட்டுகளில், 20 ஓட்டு எங்களிடம் இருந்தது. எங்கள் உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றனர். அது நடக்காததால், பா.ஜ., நிர்வாகியை தேர்தல் அதிகாரியாக நியமித்ததே தவறு. அவர் ஓட்டு எண்ணிக்கையை பார்க்கவே எங்கள் பிரதிநிதிகளை அனுமதிக்கவில்லை. எண்ணும்போதே பேனாவால் சில ஓட்டுகளில் கிறுக்கிவிட்டு, அதனால் அந்த ஓட்டுகள் செல்லாது என அறிவித்தார். உடனே அங்கிருந்து சென்றுவிட்டார். அதற்காகவே காத்திருந்த பா.ஜ.,வினர், செல்லாதவை என அவர் அறிவித்த ஓட்டு சீட்டுகளை எடுத்து கிழித்து போட்டனர். இந்த நாடகத்துக்கு கோர்ட்டில் பா.ஜ., பதில் சொல்லியாக வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us