கனிம வளங்களுக்கு வரி: மாநிலங்களுக்கு வெற்றி!
கனிம வளங்களுக்கு வரி: மாநிலங்களுக்கு வெற்றி!
கனிம வளங்களுக்கு வரி: மாநிலங்களுக்கு வெற்றி!
UPDATED : ஜூலை 25, 2024 11:34 PM
ADDED : ஜூலை 25, 2024 11:30 PM

புதுடில்லி: சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு; மத்திய அரசு அதை தடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
எம்.எம்.டி.ஆர்.ஏ., எனப்படும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் - 1957ன்படி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளமுள்ள நிலங்களை மத்திய அல்லது மாநில அரசின் துறையிடம் இருந்து குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள், 'ராயல்டி' எனப்படும் காப்புத் தொகையை செலுத்த வேண்டும்.
அவ்வாறு குத்தகை பெற்றிருந்த 'இண்டியா சிமென்ட்ஸ்' நிறுவனம் செலுத்தி வந்த ராயல்டி மீது, 'செஸ்' எனப்படும் கூடுதல் வரியை தமிழக அரசு விதித்தது.
ஏழு நீதிபதிகள்
அதை எதிர்த்து நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இறுதியாக அவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது. ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு 1989ல் விசாரித்தது.
'ராயல்டி என்பதும் வரி தான்; எனவே, அதன் மீது கூடுதலாகவோ அல்லது தனியாகவோ வரி விதிக்க முடியாது' என்று தீர்ப்பளித்தது.
மேலும், மேற்சொன்ன சட்டத்தின்படி, கனிம வளங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளதால், வரி விதிக்கும் அதிகாரம் பார்லிமென் டுக்கும், மத்திய அரசுக்கும் தான் உண்டே தவிர, மாநில அரசுக்கோ, சட்டசபைக்கோ கிடையாது' என்றும் கூறியது.
இதன்பின் மேற்கு வங்க அரசு மற்றும் 'கேசோராம் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம் இடையே, இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டது. அந்த வழக்கு, 2004ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தது.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. முந்தைய தீர்ப்பில் அச்சுப் பிழை உள்ளதாக அமர்வு தெரிவித்தது.
வரி அல்ல
அதாவது, 'ராயல்டி மீதான கூடுதல் வரி, ஒரு வரியே' என்பதற்கு பதிலாக, 'ராயல்டி என்பது ஒரு வரியே' என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதாக கூறியது. அதனால், ராயல்டி ஒரு வரியல்ல என்பது உறுதியாகிறது என்றும் அமர்வு தன் உத்தரவில் கூறியது.
இதற்கிடையே, இதே போன்ற பிரச்னையில் 80க்கு மேற்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் குவிந்தன. கடந்த முறை ஏழு நீதிபதிகள் அமர்வு விசாரித்ததால், இம்முறை ஒன்பது நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்த தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவிட்டார்.
மாறுபட்ட தீர்ப்பு
அவர் தலைமையில், ஒன்பது நீதிபதிகள் பிப்ரவரியில் விசாரணை துவங்கினர். எட்டு நாள் விசாரணை நடந்தது. வரி விதிக்க உரிமை உள்ளது என்று மாநில அரசுகள் வாதிட்டன.
அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டது. குத்தகை எடுத்தவர்களும் மத்திய அரசின் நிலையில் வாதிட்டனர். இறுதியாக நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
'ராயல்டி என்பது வரி அல்ல. தனியாக வரி விதிக்க சட்டசபைகளுக்கு உரிமை உள்ளது' என்று எட்டு நீதிபதிகள் கூறினர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வாசித்தார்.
கனிம வளங்களை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசுகளுக்கும் அந்த அதிகாரத்தை பங்கிட்டால், மேற்படி சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்பது அவர் தீர்ப்பின் சாரம்.