Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

நிதி மறுப்பு வழக்கில் தமிழக அரசின் கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு

UPDATED : ஜூன் 09, 2025 11:59 PMADDED : ஜூன் 09, 2025 11:53 PM


Google News
Latest Tamil News
சென்னை : தமிழகத்திற்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்ற, தமிழக அரசின் முறையீட்டை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

எஸ்.எஸ்.ஏ., எனப்படும், 'சமக்ர சிக் ஷா அபியான்' திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மே 21ல், தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், தமிழக அரசு கூறியுள்ளதாவது:

கடந்த 2024 - -25ம் ஆண்டில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் எஸ்.எஸ்.ஏ., நிதியை மத்திய அரசு நிறுத்துவது, கல்வி தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கான மாநில அரசின் அதிகாரத்தை அபகரிப்பதற்கு சமம்.

அதிகாரம்


இதனால், 43 லட்சம் மாணவர்கள், 2.21 லட்சம் ஆசிரியர்கள், 32,701 ஊழியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எஸ்.எஸ்.ஏ., நிதியை நிறுத்திய மத்திய அரசின் முடிவை, அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது; சட்டவிரோதமானது; தன்னிச்சையானது; நியாயமற்றது என்று அறிவிக்க வேண்டும்.

நிலுவை தொகையான 2,151 கோடி ரூபாயுடன், 6 சதவீத வட்டி தொகையும் சேர்த்து, 2,291 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

மத்திய அரசுக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டால், அதை விசாரிக்க அரசியலமைப்பின், 131வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது

'புதிய கல்வியாண்டு துவங்கி, பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால், 43 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதிக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்' என, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டார்.

அதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'தமிழக அரசின் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க, எந்த அவசரமும் இல்லை.

'உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் முடிந்ததும், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்' என்று கூறியது.

பின்னணி என்ன?




மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இரு மொழி கொள்கையை உறுதியாக பின்பற்றும் மாநிலம் என்பதால், இதை ஏற்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறி விட்டார்.

இந்த விவகாரம் தான், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே, தமிழகத்திற்கான பி.எம்.ஸ்ரீ., பள்ளிகள், எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு கூறி வருகிறது.

இது தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க., - எம்.பி,,க்களுக்கும் இடையே, கடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில் மோதல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து தான், எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கான நிதியை வழங்க உத்தரவிடக்கோரி, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us