சைக்கிளில் உலகை சுற்றும் சுவிட்சர்லாந்து உறவுகள்; மங்களூரு கட்டீல் துர்கா கோவிலில் தரிசனம்
சைக்கிளில் உலகை சுற்றும் சுவிட்சர்லாந்து உறவுகள்; மங்களூரு கட்டீல் துர்கா கோவிலில் தரிசனம்
சைக்கிளில் உலகை சுற்றும் சுவிட்சர்லாந்து உறவுகள்; மங்களூரு கட்டீல் துர்கா கோவிலில் தரிசனம்
ADDED : பிப் 10, 2024 11:30 PM

தட்சிண கன்னடாவின் பிரசித்தி பெற்ற மஹாலட்சுமி கோவிலை காண சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலா பயணியர் இருவர் சைக்கிளில் வந்துள்ளனர்.
தட்சிண கன்னடா மாவட்டத்தின் மங்களூரில், கட்டீலில் அமைந்துள்ள துர்கா பரமேஸ்வரி கோவில், மஹாலட்சுமி கோவில் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.
தினமும் இக்கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கோவிலை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிநாட்டவரும், இங்கு வருகின்றனர்.
இருவர் சுற்றுப்பயணம்
அதேபோன்று சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், சைக்கிளில் கட்டீல் புண்ணிய தலத்துக்கு வந்துள்ளனர்.
சைக்கிளில், 22 நாடுகளை சுற்றிய இவர்கள், தற்போது துர்கா பரமேஸ்வரி, மஹாலட்சுமி கோவிலுக்கு வந்துள்ளனர்.
சைக்கிளில் உலகத்தை சுற்றி வரும் இவர்களின் பெயர் கிளாடியோ பிரான்ட்லீ மற்றும் உர்ஸ். 22 வயதான கிளாடியோ, தன் மாமா உர்சுடன் உலக முழுதும் சுற்றி வருகிறார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து 2022 செப்டம்பர் 7ல் சைக்கிளில் புறப்பட்ட இவர்கள், மங்கோலியா, மத்திய ஆசியா, ஈரான், ஓமன் நாடுகள் வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு வந்தனர். அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து உள்ளனர். தற்போது மங்களூரின் கட்டீலில் தங்கி உள்ளனர்.
இங்கு துர்கா பரமேஸ்வரி, மஹாலட்சுமி கோவில்களில் தரிசனம் செய்துள்ளனர். கூகுளில் இந்த கோவில்கள் பற்றி தெரிந்து கொண்ட இவர்கள், இங்கு வந்து உள்ளூர் மக்களிடம், கோவில்களின் பாரம்பரியம், சிறப்புகள் பற்றி கேட்டறிந்தனர்.
மிகவும் நல்லவர்கள்
கிளாடியோ பிரான்ட்லீ கூறுகையில், ''நிதானமாக பயணம் செய்வதால், மக்களை எளிதில் சென்றடைய முடியும். இந்தியாவின் உள்ளூர் ஹோட்டல்களில் உணவு உட்கொள்கிறோம்.
''இந்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். நட்பை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த சைக்கிள் தான் எனது உயிர் நண்பன். இதற்கு நான் 'டின் டன்' என்று பெயர் வைத்துள்ளேன். வரும் நாட்களில், கடற்கரைகளை பார்த்துவிட்டு, நேபாளத்துக்கு செல்வோம்.
''சைக்கிளில் செல்ல முடியாத இடத்துக்கு ரயிலில் செல்வோம். அங்கிருந்து சைக்கிளில் ஊரை சுற்றிப்பார்க்கிறோம். இந்த பயணம் எங்களுக்கு மகிழ்ச்சி அளித்து உள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் -