Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'டம்மி' பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுத முடியாது

'டம்மி' பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுத முடியாது

'டம்மி' பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுத முடியாது

'டம்மி' பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுத முடியாது

UPDATED : மார் 28, 2025 06:48 AMADDED : மார் 28, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 'தினந்தோறும் வகுப்புகளுக்கு செல்லாமல் நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்கும், 'டம்மி' பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, பல ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தயார்படுத்திக் கொள்வது வழக்கம்.

'டம்மி' பள்ளிகள்


இதில் சில மாணவர்கள், பிளஸ் 2 பாடங்களில் கவனம் செலுத்தாமல், நுழைவுத் தேர்வுக்கு தயாராவதில் மட்டுமே கவனம் செலுத்துவர்.

இது போன்ற மாணவர்கள் தினசரி வகுப்புகளுக்கு வராவிட்டாலும், நேரடியாக பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத சில பள்ளிகள் அனுமதிக்கின்றன. இவை, 'டம்மி' பள்ளிகள் என்றழைக்கப்படுகின்றன.

இது போன்ற சில பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., வாரியம் சமீபத்தில் அடையாளம் கண்டது. இதையடுத்து, தேர்வு விதிகளில் பல மாற்றங்களை செய்துள்ளது.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளிக்கு தொடர்ச்சியாக வராத மாணவர்கள் அல்லது சி.பி.எஸ்.இ., வாரியத்தின் திடீர் சோதனையின் போது, வகுப்பில் இல்லாத மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாணவர் தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு வருவது சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோரின் பொறுப்பு.

சில காரணங்கள்


பொதுத் தேர்வு எழுத மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 75 சதவீத வருகை பதிவு இருக்க வேண்டும். இல்லாத மாணவர்கள், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனத்தின் கீழ், பிளஸ் - 2 பொதுத் தேர்வை எழுத அந்நிறுவனத்தை அணுகலாம்.

அவசர மருத்துவ காரணங்கள், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பு உள்ளிட்ட சில காரணங்களுக்கு, 25 சதவீத விலக்கு அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்த விதிமுறைகள், 2025 - 26ம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us