வெளிநாடுகளின் சட்டங்களை மதிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!: அமெரிக்க சம்பவங்களால் மத்திய அரசு எச்சரிக்கை
வெளிநாடுகளின் சட்டங்களை மதிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!: அமெரிக்க சம்பவங்களால் மத்திய அரசு எச்சரிக்கை
வெளிநாடுகளின் சட்டங்களை மதிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தல்!: அமெரிக்க சம்பவங்களால் மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : மார் 22, 2025 11:54 PM

புதுடில்லி: அமெரிக்காவில் விசா ரத்து செய்யப்பட்டதால், இந்திய மாணவி ஒருவர் தானாகவே வெளியேறினார்; மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள், அங்குள்ள சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என, நம் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசனின் விசாவை, அந்த நாட்டு அரசு சமீபத்தில் ரத்து செய்தது.
மேற்காசியாவில், இஸ்ரேலுக்கு எதிராக போர் நடத்தி வரும் பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதிகாரம்
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, இவருடைய விசா ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தானாகவே அமெரிக்காவில் இருந்து வெளியேறிய ரஞ்சனி, வட அமெரிக்க நாடான கனடாவுக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, ஜார்ஜ்டவுன் பல்கலையில், ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் பாதர் கான் சுரி என்ற மாணவர், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரது மனைவி பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். அதனால் தான் கைது செய்யப்பட்டதாக பாதர் கான் சுரி கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை ஆகியவை, இவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப உத்தரவிட்டன.
ஆனால், இதற்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு கொண்டுள்ளார், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
அதற்கு ஆதரவாக செயல்பட்டால், பல்கலைகளுக்கான நிதியை நிறுத்துவதாகவும் சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:
விசா மற்றும் குடியேற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க அந்தந்த நாடுகளுக்கு முழு உரிமை மற்றும் அதிகாரம் உள்ளது. அதனால் இந்த விவகாரங்களில் அமெரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அதன் உள்நாட்டு பிரச்னை தொடர்பானது.
நம் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்கள், நம் நாட்டின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்று, எதிர்பார்க்கிறோம். அதுபோலவே, நம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள சட்டத் திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.
வெளிநாடுகளில் மாணவர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அவர்களுக்கு தேவையான உதவிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள நம் துாதரகங்கள், துணை துாதரகங்கள் செய்யத் தயாராக உள்ளன.
தேவையான உதவிகள்
ஆனால் பாதர் கான் சுரி மற்றும் ரஞ்சனி ஸ்ரீனிவாசன் விவகாரங்களில் அவர்கள், நம் துாதரகங்களை அணுகவில்லை; எந்த உதவியும் கோரவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே இந்த விஷயங்கள் நமக்கு தெரியவந்துள்ளன.
அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் இருதரப்பு உறவை வலுப்படுத்த அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
அமெரிக்கா உட்பட எந்த நாட்டுக்குச் சென்றாலும், நம் மாணவர்கள் அங்குள்ள நம் துாதரகங்களை தொடர்பு கொள்ளலாம். தேவையான உதவிகள் நிச்சயம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.