
புதுடில்லி: பிரதமர் மோடி, நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு, வரும் 30ல் செல்கிறார். இங்குதான், சமீபத்தில் மத கலவரம் வெடித்தது. கடந்த 2014ல் பா.ஜ., வெற்றி பெற்று, மோடி பிரதமரான பின், ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு சென்றதே இல்லை. ஆனால், பிரதமர் ஆவதற்கு முன், நாக்பூர் அலுவலகத்திற்கு அடிக்கடி சென்றுள்ளார். 'பா.ஜ.,வை இயக்கும், ஆர்.எஸ்.எஸ்., நாக்பூர் அலுவலகத்திற்கு ஏன் மோடி போகவில்லை?' என, அப்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
தற்போதைய பயணத்தின்போது, 'மாதவ் நேத்ராலயா' என்ற கண் பரிசோதனை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப் போகிறார் மோடி. இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
'அப்போது, முக்கியமான பெரிய அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார்' என, பலரும் எதிர்பார்க்கின்றனர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், நாக்பூரின் ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்திற்கு வந்துள்ளார்.
மோடியின் இந்த, 'விசிட்' குறித்து இன்னொரு விஷயமும், டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. பா.ஜ.,வின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பதை மோகன் பகவத், பிரதமர் உட்பட மற்ற தலைவர்களும் முடிவு செய்வர் என, சொல்லப்படுகிறது. தற்போது தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது; அடுத்த தலைவர் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில், மோடியின் நாக்பூர் பயணம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள்.