அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் கங்காராம் மருத்துவமனையில் திறப்பு
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் கங்காராம் மருத்துவமனையில் திறப்பு
அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் கங்காராம் மருத்துவமனையில் திறப்பு
ADDED : ஜூன் 26, 2025 09:44 PM
புதுடில்லி:டில்லியில், அதிநவீன வசதிகளுடன் கூடிய, புற்றுநோய் மருத்துவமனை துவக்கி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபடி முர்முவால் சர் கங்கா ராம் மருத்துவமனையில் துவக்கி வைக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் உள்ளன.
டில்லியின் பழைய ரஜிந்தர் நகர் பகுதியில் நேற்று, அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையம் என்ற பெயரிலான புதிய மருத்துவமனையை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்து, வளாகத்தை சுற்றிப் பார்த்து, நோயாளிகளின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த மருத்துவமனையில் மருத்துவம், அறுவை சிகிச்சை, புற்று நோய் சிகிச்சைக்கான கதிரியக்க வசதி, பகல் நேரத்திலேயே கீமோதெரபி சிகிச்சை பெற்று செல்வதற்கான ஏற்பாடுகள் போன்றவை, ஒரு இடத்தில் கிடைக்கும். இதனால், நோயாளிகள் வெவ்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக செல்வது தவிர்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில், சர் கங்கா ராம் டிரஸ்ட் சொசைட்டியின் தலைவர் டாக்டர் டி.எஸ்.ரானா பேசியதாவது:
ஏழைகளுக்கும், வசதி குறைவானவர்களுக்கும், நிறைவான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்ற எங்களின் தீர்க்கமான எண்ணம் இதன் மூலம் நிறைவேறிஉள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, 25 பிரபல டாக்டர்களால் இந்த மருத்துவமனையின் நிர்வாக குழு நிர்வகிக்கப்படுகிறது. நீடித்த மற்றும் குறைந்த விலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகக் குழுவின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கூறும் போது,''எங்கள் மருத்துவமனையை தோற்றுவித்த பிதாமகன்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், இந்த மருத்துவமனை மருத்துவ சேவை அளித்து வருகிறது. புற்றுநோய் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்,'' என்றார்.
கடந்த 1954ல் துவக்கப்பட்ட இந்த மருத்துவமனை, ஏற்கனவே, புற்றுநோய் சிகிச்சை அளித்து வருகிறது. நேற்று துவக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் அனைத்து விதமான சிகிச்சைகள், சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்பு போன்ற அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கிறது.