ரூ.376 கோடியில் ஆறு மேம்பாட்டு திட்டங்கள்
ரூ.376 கோடியில் ஆறு மேம்பாட்டு திட்டங்கள்
ரூ.376 கோடியில் ஆறு மேம்பாட்டு திட்டங்கள்
ADDED : ஜன 05, 2024 10:18 PM
சபரிமலை : பக்தர்கள், நிர்வாக வசதிக்காக சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் ரூ.376 கோடியில் ஆறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மகர விளக்கு சீசன் முடிந்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கும்.
பம்பை ஹில்டாப்பில் இருந்து கணபதி கோயிலுக்கு பாலம் கட்டுவதில் வனத்துறை ஏற்படுத்தி வந்த தடைகள் தற்போது நீங்கியுள்ளது.
இயற்கை சீற்றம் மற்றும் அவசர கால தேவைகளுக்காக ரூ.32.9 கோடியில் 12 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் அமைகிறது. மத்திய வனம், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் துறைகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் மேல் சாந்தி மற்றும் தந்திரியின் அறைகள் தற்போது உள்ள இடத்திலிருந்து மாற்றப்படும். அதுபோல 18 படி ஏறியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் மேல்பாலம் அகற்றப்படும். இது கோயில் மூலஸ்தானத்தை விட உயரமாக இருப்பதால் அதை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே தேவப்பிரசன்னத்தில் கூறப்பட்டிருந்தது. ரூ.90 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
ரூ.70 கோடியில் பாலம்
சபரிமலை சன்னிதானத்தில் சன்னதி பின்புறம் ராணுவம் அமைத்த பெய்லி பாலம் பக்தர்களுக்கு பயன்படாமல் இருக்கிறது. இதன் உயரமான படிக்கட்டுகளில் ஏற முடியாததால் இதனை பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு பதிலாக ரூ.70 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படும்.
சன்னிதானத்தில் ரூ.3.74 கோடியில் தீ தடுப்பு கருவிகள் அமைக்கப்படும். நிலக்கல்லில் தேவசம்போர்டுக்கு சொந்தமான 110 ஏக்கர் நிலத்தில் ரோடுகளும் சிறு பாலங்களும் ரூ.144 கோடியில் அமைக்கப்படுகிறது.
இங்கு ரூ.28.4 கோடியில் நிர்வாக அலுவலகம், தங்குமிடம், அன்னதான மண்டபம் போன்றவை அமைக்கப்படும்.
சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டியின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத் திட்டங்களின் அறிக்கை அரசுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு மானியம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இந்த பணிகள் முடிக்கப்படும்.