Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?

ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?

ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?

ஒக்கலிகர் சமூகத்தின் ஆதரவை சிவகுமார் இழக்கிறார்?

ADDED : ஜூன் 11, 2024 04:09 PM


Google News
Latest Tamil News
கர்நாடகாவில் நடக்கும் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர்கள், வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், ஜாதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வட மாவட்டங்களில் லிங்காயத் ஓட்டுகளும், தென் மாவட்டங்களில் ஒக்கலிகர் ஓட்டுகளும் வேட்பாளர்கள் தலை எழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளன. லிங்காயத் சமூகத்தின் முக்கிய தலைவர்களாக எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும்; காங்கிரசின் சாமனுார் சிவசங்கரப்பா, எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.

ஒக்கலிக சமூகத்தை பொறுத்தவரை முன்னாள் பிரதமர் தேவகவுடா, அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோர் பலம் வாய்ந்த தலைவர்களாக உள்ளனர். பா.ஜ.,வில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் அசோக், முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, மத்திய இணை அமைச்சர் ஷோபா ஆகியோர் ஒக்கலிகர்கள் என்றாலும், ஒக்கலிகர்கள் மத்தியில் பெரிய அளவில், செல்வாக்கு இல்லாதவர்கள். ஆனால், காங்கிரசின் துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஆகியோருக்கு, ஒக்கலிகர் மத்தியில் செல்வாக்கு உள்ளது.

கடும் அதிருப்தி


தேவகவுடா குடும்பத்திற்கு இருக்கும் ஒக்கலிகர்கள் ஆதரவை பெற, சிவகுமார் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, 'பல ஆண்டுகளுக்கு பின்பு ஒக்கலிக சமூகத்திற்கு, முதல்வர் ஆகும் வாய்ப்பு கணிந்து வருகிறது' என்று, சிவகுமார் கூறியிருந்தார். இதனால் ஒக்கலிகர்கள் பார்வை, சிவகுமார் மீது திரும்பியது. அவர் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பில், ஒக்கலிகர்கள் காங்கிரசை ஆதரித்து வெற்றி பெற வைத்ததாக அக்கட்சியினர் கூறினர்.

ஆனால், சித்தராமையா முதல்வர் ஆனதால், ஒக்கலிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'சிவகுமார் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்த்து, காங்கிரசை ஆதரித்தோம்' என்று, வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். ஒக்கலிக சமூக தலைவர்களும், சிவகுமாரிடம் சென்று, 'நீங்கள் தானே முதல்வர் ஆவீர்கள் என்று சொன்னீர்கள். இப்போது எதற்காக முதல்வர் பதவியை விட்டு கொடுத்தீர்கள்' என்று கேட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், சிவகுமார் திணறினார். இதனால் சிவகுமார் மீது வைத்த நம்பிக்கையை, ஒக்கலிகர்கள் இழக்க ஆரம்பித்தனர்.

பா.ஜ.,வுக்கு பிளஸ்


இதை குமாரசாமி சாதகமாக பயன்படுத்தி கொண்டார். பழைய மைசூரில் பா.ஜ.,வுக்கும் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டால், சட்டசபை தேர்தலில் இழந்த ஒக்கலிகர்கள் ஆதரவை திரும்ப பெறலாம் என்று கணக்கு போட்டார். அதன்படி பா.ஜ., வுடன் கூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தார்.

குமாரசாமி போட்ட கணக்கு தற்போது பலித்து உள்ளது. லோக்சபா தேர்தலில் ஒக்கலிகர்கள் காங்கிரசை புறக்கணித்து உள்ளனர். பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, மாண்டியா, துமகூரு, சிக்கபல்லாப்பூர், கோலார், மைசூரு ஆகிய தொகுதிகளில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது.

குறிப்பாக தங்கள் கோட்டையாக இருந்த பெங்களூரு ரூரலில் காங்கிரஸ் தோற்று இருப்பதால், சிவகுமார் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். ம.ஜ.த.,வை தங்கள் கூட்டணியில் இணைத்து கொண்டது, பா.ஜ.,வுக்கும், 'பிளஸ்' ஆக மாறி உள்ளது.

ஒக்கலிகர் கோட்டையான பழைய மைசூரில் நாங்கள் தான் ராஜா என்று, தேவகவுடா குடும்பம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து காண்பித்து உள்ளது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில் சிவகுமாரை ஆதரித்த ஒக்கலிகர் சமூகம் அவரை கைவிட ஆரம்பித்து விட்டதா என்றும், கேள்வி எழுந்துள்ளது.

அதிகார ஆணவம்


இது குறித்து, பழைய மைசூரு பகுதியை சேர்ந்த ம.ஜ.த., பிரமுகர்கள் கூறியதாவது:

பெங்களூரு ரூரல் தொகுதிக்காக தேவகவுடா, சிவகுமார் குடும்பம் இடையில் பல ஆண்டுகளாக நீயா, நானா போட்டி உள்ளது. கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ராம்நகர், சென்னப்பட்டணா ஆகிய இரு தொகுதிகளில் குமாரசாமி வெற்றி பெற்றார். சென்னப்பட்டணாவை தக்க வைத்து கொள்ள, ராம்நகர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். அவரது மனைவி அனிதா, அந்த தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஆனாலும், அவர் தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. 'ராம்நகர் நமது கோட்டை. அங்கு யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறலாம்' என்று நினைத்து, குமாரசாமி தன் மகன் நிகிலை, 2023 சட்டசபை தேர்தலில் நிறுத்தினார். ஆனால் குமாரசாமி, அனிதா மீதான அதிருப்தியால், நிகில் தோற்று போனார்.

கடந்த 2018 சட்டசபை தேர்தலில் ராம்நகர், சென்னப்பட்டணா, மாகடி என மூன்று தொகுதிகளிலும், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். கனகபுராவில் மட்டும் சிவகுமார் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2023 சட்டசபை தேர்தலில் சென்னப்பட்டணா தவிர, மற்ற மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது.

ஆனால் சிவகுமார் உட்பட காங்கிரசின் மூன்று எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. அதிகார ஆணவத்தில் சிவகுமாரும் ஆட்டம் போட்டார். இதனால் லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரலில் காங்கிரஸ் தோற்று உள்ளது. ஒக்கலிகர்கள் ஆதரவு எப்போதும், தேவகவுடா குடும்பத்திற்கு தான் என்பதை, சிவகுமார் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us