அதிகாரிகளுடன், சிவகுமார் ஆலோசனை; வரலாறு காணாத கனமழை
அதிகாரிகளுடன், சிவகுமார் ஆலோசனை; வரலாறு காணாத கனமழை
அதிகாரிகளுடன், சிவகுமார் ஆலோசனை; வரலாறு காணாத கனமழை
ADDED : ஜூன் 04, 2024 05:09 AM

பெங்களூரு : பெங்களூரில் 133 ஆண்டுகளுக்கு பின், கனமழை பெய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன், துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரில் கடந்த 2ம் தேதி காலை 8:30 மணியில் இருந்து, 3ம் தேதி காலை 8:30 மணி வரை 24 மணி நேரத்தில், 11.11 செ.மீ., மழை பெய்தது. கடந்த 133 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில், ஒரே நாளில் பெய்த கனமழை இது என்பதால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் மழை பாதிப்பு குறித்தும், அதை தடுப்பது பற்றியும் துணை முதல்வர் சிவகுமார் நேற்று பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். “பெங்களூரில் மழை பாதிப்பை தடுக்க, அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மழையால் பொதுமக்கள் உயிர், உடைமைகளுக்கு சேதம் ஏற்பட கூடாது,” என, அதிகாரிகளுக்கு சிவகுமார் உத்தரவிட்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
* தடை உத்தரவு
மழை பாதிப்புகள் குறித்து 1533 என்ற எண்ணில், பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வனத்துறையும், மாநகராட்சியும் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி, ஆபத்தான மரங்களை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
சாக்கடை கால்வாய்களுக்கு அருகே, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிகளில், விரைவில் வெளியேற்றும் திறன் கொண்ட பம்ப்செட், ஜெனரேட்டர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் தொடர்பில் இருக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் என்று, அதிகாரிகளிடம் கூறி உள்ளேன்.
சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்ற சிலர் நீதிமன்றம் மூலம், தடை உத்தரவு வாங்கி உள்ளனர். ஆக்கிரமிப்பு நிலம் அரசு சொத்து. சாக்கடை கால்வாயில் தண்ணீர் செல்வதில் பிரச்னை ஏற்பட்டால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
* கடினமான பணி
மழைப் பிரச்னையை சிறப்பாக கையாண்ட அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறேன். மெட்ரோ ரயில் பாதையிலும் மரம் விழுந்தது. ஆனால் விரைவில் மரம் அகற்றப்பட்டது. மழை பெய்வதால் சாலை பள்ளங்களை மூடுவதில் தாமதம் ஆகலாம். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும்.
மரம் விழுந்து மின்கம்பி அறுந்தால், அதை சரிசெய்வது கடினமான பணி. ஆனாலும் பெஸ்காம் அதிகாரிகள் தங்களால் இயன்றவரை, அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து உள்ளனர்.
கவுன்சிலர்கள் இல்லாததால் வார்டுகளில் பிரச்னை ஏற்படுகிறது. பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை, மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மாநகராட்சி தேர்தலை நடத்துவது பற்றி யோசிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***