ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா: ராகுலுக்கு அமித்ஷா கேள்வி
ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா: ராகுலுக்கு அமித்ஷா கேள்வி
ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமை வழங்கலாமா: ராகுலுக்கு அமித்ஷா கேள்வி
ADDED : செப் 18, 2025 04:10 PM

பாட்னா: '' ஓட்டுத் திருட்டு எனக்கூறி வரும் ராகுல், ஊடுருவல்காரர்களை பாதுகாத்து வருகிறார். அவர்களுக்கு ஓட்டுரிமை, ரேசன் கார்டு ஆகியவற்றை வழங்க வேண்டுமா,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.
ஓட்டுத் திருட்டு என குற்றம்சாட்டி வந்த காங்கிரஸ் எம்பி ராகுல், கால் சென்டர்கள், மென்பொருள் உதவியுடன் ஓட்டு திருட்டு நடக்கிறது. ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்களை தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் காப்பாற்ற நினைக்கிறார் என குற்றம்சாட்டியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என தேர்தல் கமிஷன் விளக்கி உள்ளது.
இந்நிலையில், பீஹார் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில் பேசும் போது கூறியதாவது: ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் பொய் கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது. ராகுல், ஒரு யாத்திரை மேற்கொண்டார். ஓட்டுத் திருட்டுக்காகவோ, சிறந்த கல்விக்காகவோ, வேலைவாய்ப்புக்காகவோ, சாலை மற்றும் மின்சாரத்துக்காகவோ அவர் யாத்திரை மேற்கொள்ளவில்லை. அவரது சுற்றுப் பயணத்தின் நோக்கம் வங்கதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதே ஆகும். அது ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் யாத்திரை ஆகும்.
ஊடுருவல்காரர்களுக்கு ஓட்டுரிமையும் இலவச ரேசனும் அளிக்கப்பட வேண்டுமா?அவர்களுக்கு வேலைவாய்ப்பு, வீடு மற்றும் மருத்துவ காப்பீட்டில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை ஆகிய பலன்கள் சென்று சேர வேண்டுமா? வேலைவாய்ப்புகளை, நமது இளைஞர்களுக்கு வழங்காமல், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு ராகுலும் காங்கிரசும் வழங்குகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கு நாம் சென்று, தவறான அரசு அமைந்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஊடுருவல்காரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதை விளக்க வேண்டும் என்பது நமது கடமை. இவ்வாறு அவர் பேசினார்.
ராகுலின் வழக்கம்
டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டி: ராகுலுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியே கிடைத்துள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்டதுடன். அவரது தலைமையில், காங்கிரஸ் 90 தேர்தல்களில் தோற்று விட்டது.இதனால் அவருக்கு கோபமும் விரக்தியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்களது கற்பனைக்கு ஏற்ப குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறினால், அவர்கள் ஓடுகின்றனர். பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டால் அவர்கள் பின்வாங்குகின்றனர். பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது ராகுலின் பழக்கமாகிவிட்டது.
குற்றச்சாட்டுகளை தெரிவித்த பின்பு, மன்னிப்பு கேட்பதும், நீதிமன்றத்தால் கண்டிப்புக்கு உள்ளாவதும் ராகுலுக்கு வாடிக்கையாகி. ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றம் கண்டிக்கிறது. ரபேல், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றம் கண்டித்ததை அவர் மறந்துவிட்டார். சேற்றை வாரி இறைத்துவிட்டு தப்பியோடுவது தான் ராகுலின் வழக்கம். ஹைட்ரஜன் குண்டுகளை வீசப்போவதாக கூறிவிட்டு பட்டாசுகளை வெடித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.