தார்வாட் லோக்சபா தொகுதியில் ஷெட்டர் போட்டி? பிரஹலாத் ஜோஷியின் நிலை கேள்விக்குறி
தார்வாட் லோக்சபா தொகுதியில் ஷெட்டர் போட்டி? பிரஹலாத் ஜோஷியின் நிலை கேள்விக்குறி
தார்வாட் லோக்சபா தொகுதியில் ஷெட்டர் போட்டி? பிரஹலாத் ஜோஷியின் நிலை கேள்விக்குறி
ADDED : பிப் 10, 2024 11:52 PM

ஹுப்பள்ளி : ''லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். தார்வாட் உட்பட கட்சி மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிடும்படி கூறுகிறதோ, அங்கு களமிறங்குவதற்கு தயார்,'' என, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
பா.ஜ.,வில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர், மாநில தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என, பல பதவிகளை அனுபவித்தனர் ஜெகதீஷ் ஷெட்டர்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட, வாய்ப்பு தரவில்லை என்பதற்காக, பா.ஜ.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவருக்கு காங்கிரஸ் தரப்பில் எம்.எல்.சி., பதவி தரப்பட்டது.
ஆனால், திடீரென காங்கிரசில் இருந்து விலகி, கடந்த மாதம் பா.ஜ.,வுக்கு திரும்பினார். அவருக்கு லோக்சபா தேர்தலில் ஹாவேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதுகுறித்து, ஹுப்பள்ளியில் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளேன். தார்வாட் உட்பட கட்சி மேலிடம் எந்த தொகுதியில் போட்டியிடும்படி கூறுகிறதோ, அங்கு களமிறங்குவதற்கு தயார்.
கட்சி பணி ஆற்றும்படி கூறினால், அதை செய்யவும் தயாராக இருக்கிறேன். நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆவது தான் முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தார்வாட் என்று ஜெகதீஷ் ஷெட்டர் குறிப்பிட்டிருப்பதால், ஒரு வேளை அவருக்கு வாய்ப்பு தந்தால், அத்தொகுதி எம்.பி.,யாக இருக்கும் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.