கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க தனி குழு அமைப்பு
கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க தனி குழு அமைப்பு
கோடை காலத்தில் வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க தனி குழு அமைப்பு
ADDED : ஜன 06, 2024 07:01 AM

மைசூரு: கோடை காலத்தில் நாகரஹொளே புலிகள் காப்பகத்தில் ஏற்படும் தீ விபத்தைத் தவிர்க்க, வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். உடனடியாக தீயை அணைக்க நடமாடும் தீயணைப்பு குழுவும், இரண்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, நாகரஹொளே புலிகள் காப்பகத்தின் இயக்குனர் ஹரிஷ் குமார் கூறியதாவது:
காட்டில் தீப்பிடித்தவுடன், ஒரு மணி நேரத்துக்குள், நாங்கள் அந்த இடத்தை பார்வையிட்டு, அணைக்க திட்டமிட்டுள்ளோம்.
எனவே, இம்முறை நடமாடும் தீயணைப்புக் குழு அமைத்து, தீ விபத்து ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று நடவடிக்கையை துவக்கி உள்ளனர். தீயணைப்பு கண்காணிப்பு குழு மற்றும் தீயணைப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளன.
மண்டலம் வாரியாக, எட்டு முதல் பத்து பேர் கொண்ட வனப்பணியாளர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பர். இவர்கள் வனப்பகுதியில் முகாமிட்டு, தாவரங்கள், வன விலங்குகளை கண்காணித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில் உள்ள ஊழியர்கள், காட்டில் ஏதேனும் தீ அல்லது புகை விபத்து நடந்த இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.
வனப்பகுதிக்குள், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒன்று அல்லது இரண்டு கண்காணிப்பு கோபுரங்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
பணியாளர்களை அழைத்து செல்ல உணவு, தண்ணீர் உட்பட அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல நடமாடும் தீ பாதுகாப்பு முகாம் தயாராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.