ஆப்கானிஸ்தானில் கல்வி சாதனமாகும் சென்னபட்டணா பொம்மைகள்
ஆப்கானிஸ்தானில் கல்வி சாதனமாகும் சென்னபட்டணா பொம்மைகள்
ஆப்கானிஸ்தானில் கல்வி சாதனமாகும் சென்னபட்டணா பொம்மைகள்
ADDED : ஜன 07, 2024 02:38 AM

சென்னபட்டணாவில் தயாராகும் மர பொம்மைகள், உலக பிரசித்தி பெற்றவை. இங்கு தயாராகும் தரமான பொம்மைகள், வெளிநாட்டில் குழந்தைகளுக்கு கல்வி சாதனமாக பயன்படுகிறது.
பெங்களூரில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் ராம்நகர் மாவட்டத்தில், சென்னபட்டணா உள்ளது. சென்னபட்டணா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் கைவினை கலைஞர்கள், மர பொம்மைகள் தயாரிக்கின்றனர்.
அங்கீகாரம்
இவற்றுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளன. கால போக்கில் பிளாஸ்டிக், உலோகம், பீங்கான், ரப்பர் என, மற்ற பொருட்களில் தயாரிக்கும் பொம்மைகள் மார்க்கெட்டில் கால் பதித்த பின், சென்னப்பட்டணா பொம்மைகளுக்கு மவுசு குறைந்தது.
இத்தகைய பொம்மைகளுக்கு, ரசாயன சாயம் பூசுகின்றனர். இவை சிறார்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆனால் சென்னபட்டணா பொம்மைகளுக்கு, ரசாயனம் பூசுவதில்லை.
இயற்கையான சாயங்கள் பூசுகின்றனர். சிறார்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. சென்னபட்டணாவில், விதவிதமான மர பொம்மைகள் தயாரிக்கும் மையங்கள், விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் 50 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தயாராகும் பொம்மைகளுக்கு, பழைய பெருமையை கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.
ரயில் நிலையங்களில் சென்னபட்டணா பொம்மைகள் விற்பனை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெஜஸ்டிக் ரயில் நிலையம் உட்பட, முக்கியமான ரயில் நிலையங்களில் கடைகள் திறக்கப்பட்டன. இங்கு வரும் பயணியர் ஆர்வத்துடன் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.
சென்னபட்டணாவில் தயாராகும் மர பொம்மைகள், தற்போது ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்கு கல்வி சாதனமாக பயன்படுகின்றன.
மத்திய வெளியுறவுத்துறை சென்னபட்டணா பொம்மைகளை, ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.
ஆப்கானிஸ்தானில், நுாற்றுக்கணக்கான சிறார்கள் போதைப்பொருட்கள் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீட்க, பெற்றோர் போராடுகின்றனர். அந்நாட்டு அரசு, இந்திய அரசின் வெளியுறவுத்துறையின் ஆதரவை நாடியது.
வெளியுறவுத்துறை மூலமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னபட்டணா பொம்மைகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. இந்த பொம்மைகள் சிறார்களுக்கு கல்வி சாதனமாக பயன்படுத்தப்படுகின்றன.
இது சிறார்களின் மனமாற்றத்துக்கு பேருதவியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கர்நாடக கிராமிய வாழ்க்கை பாதுகாப்பு மிஷன் இயக்குனர் ஸ்ரீவித்யா கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன்பு, தந்தம் மற்றும் மரத்தால் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள், ஆப்கானிஸ்தான் சிறார்களுக்கு அனுப்பப்பட்டன. 12 வயதுக்கு உட்பட்டோருக்கு, கல்வி, பொழுதுபோக்குக்கு உதவும் பொருட்களை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்துள்ளன.
நிதியுதவி
இத்தகைய பொம்மைகள் வேண்டும் என, ஆர்டர்கள் வந்தன. சென்னபட்டணா விளையாட்டு பொருட்களுக்கு, ரசாயனம் பயன்படுத்துவதில்லை. அபாயமான அம்சங்கள் இல்லாததால், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது.
சென்னபட்டணா பொம்மைகள் தயாரிப்பு தொழிலுக்கு, 4.98 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இது மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொழிலாகும்.
நாங்கள் ஆன்லைன், ஆப்லைன் மார்க்கெட்டிங் என, பல வழிகளில் கைவினை பொருட்கள் தயாரிப்போருக்கு உதவுகிறோம். இங்கு தயாராகும் விளையாட்டு பொருட்கள் தரமானது. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -