பள்ளி சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
பள்ளி சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
பள்ளி சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
UPDATED : ஜன 07, 2024 06:38 AM
ADDED : ஜன 07, 2024 06:34 AM

தமிழக நிகழ்வுகள்
பள்ளி சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம்: பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
![]() |
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 56; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி, 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது கூறினால் உன் தந்தையை கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பன்னீர்செல்வத்தை கைது செய்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார், அவர் மீது விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மிஸ், குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வத்துக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ரூ. 20 ஆயிரம் ் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு வழங்க உத்தரவிட்டார்.
தீர்ப்பை தொடர்ந்து, பன்னீர்செல்வம் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பிச்சை எடுக்கும் தகராறில் ஒருவர் கொலை: 3 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடியில் தியேட்டர் அருகே பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு இறப்பு குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் போலீசார் பூமிநாதன் என்பவரை விசாரணை செய்தனர். விசாரணையில் பூமிநாதனின் மனைவி பாகம்பிரியாள் என்பவருக்கும் இறந்த நபரான மூர்த்திக்கும் பிச்சை எடுப்பதில் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் பூமிநாதன் ,நாராயணன் மற்றும் அவரது நண்பர் சரவணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மூர்த்தி துாங்கும்போது கல்லால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
11 பேரிடம் ரூ. 6.72 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் 'அட்டூழியம்'
புதுச்சேரியில் சமீபத்தில் ஆன்லை மூலம் பணம் மோசடி செய்வதால்,சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு ேஷர் மார்க்கெட் செய்தால் அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என, எஸ்.எம்.எஸ்., வந்தது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது.
அதே போல், மர்ம நபர் பேசியதை நம்பி பாப்பாஞ்சாவடி கணேஷ் 29 ஆயிரம், சாரம் ராஜ்குமார் 15 ஆயிரம், வில்லியனுார் பிள்ளையார்குப்பம் முகமதுநுபல் 2 லட்சம், எல்லைப்பிள்ளைச்சாவடி அன்புதமிழ், 2.58 லட்சம், கண்ணன் 20 ஆயிரம், கோரிமேடு வெங்கடேசன் 15 ஆயிரம், எஸ்.வி.,பட்டேல் சாலை சரவணன் 5 ஆயிரம், சாரம் திருமுருகன் 20 ஆயிரம், சண்முகாபுரம் துரைராஜ் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமார்ந்தனர்.
மேலும், கருவடிக்குப்பம் முகமது நாசர் என்பவர் மொத்தமாக ஷூ வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பி ஏமார்ந்தார்.இவர்கள் அனைவரும் அளித்த புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
குட்கா விற்பனை 7 கடைகளுக்கு சீல்
சேத்தியாத்தோப்பு; சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குட்கா பதுக்கி விற்பனை செய்த 7 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி அருள்மொழி, சுகாதார ஆய்வாளர் ராஜமோகன் ஆகியோர் சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம் பகுதி கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது பெட்டிக் கடைகளில் குட்கா பதுக்கி விற்றதாக ஸ்ரீமுஷ்ணம் பட்டி தெரு, சுமதி, பரிமளா, கொண்டசமுத்திரம் சுந்தர், அறந்தாங்கி ரங்கசாமி, சித்தமல்லி ராமச்சந்திரன், மாமங்கலம் முத்துலட்சுமி, கலியங்குப்பம் மணி ஆகியோரது பெட்டிக்கடைகளுக்கு சீல் வைத்தனர்.
ரூ. 1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
பண்ருட்டி: பண்ருட்டி அருகே கல்லறை தோட்ட பங்களாவில் பதுக்கி வைத்திருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
![]() |
கடலுார் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு கிராமத்தில் கல்லறை அருகே உள்ள பாழடைந்த பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர். அங்கு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் புதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடலூர் சி.என்.பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்,45; என்பவர் பதுக்கி வைத்திருந்தது தெரிவந்து, அவரை பிடிதது, காடாம்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர்.
காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் வழக்கு பதிந்து சங்கரை கைது செய்தனர்.
சலுான் கடையில் திருடிய வடமாநில வாலிபர் கைது
கடலுார்; சலுான் கடையில் பணம் திருடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி, காந்தி ரோட்டை சேர்ந்தவர் ரவிசங்கர், 43; கடலுார், கோண்டூரில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகமது வாபி, 30; என்பவர் கடந்த 2 வாரங்களாக வேலை செய்து வந்தார். கடந்த 5ம் தேதி, ரவிசங்கர் கல்லா பெட்டியில் 10 ஆயிரம் ரூபாயை வைத்து விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, முகமது வாபியை காணவில்லை. கடையில் இருந்த பணத்தையும் காணவில்லை.
இதுகுறித்து ரவிசங்கர் கொடுத்த புகாரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, கடலுார் ரயில் நிலையத்தில் நின்றிருந்த முகமது வாபியை கைது செய்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மனைவிக்கு சரமாரி வெட்டு சின்னசேலம் அருகே கணவர் கைது
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்
சின்னசேலம் அடுத்த கீழ்நாரியப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; இவரது மனைவி புஷ்பா, 25; இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர்.
தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று மதியம் 12:00 மணியளவில் எஸ்.ஒகையூர் - சிறுமங்கலம் சாலை வழியாக புஷ்பா நடந்து சென்றார்.
அப்போது பைக்கில் வந்த மணிகண்டன், புஷ்பாவை வழிமறித்து திட்டி, கொடுவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில், படுகாயமடைந்த புஷ்பா கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார், வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
கள்ளக்குறிச்சி: வி.கிருஷ்ணாபுரத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை, பணம் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
![]() |
சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னனையன் மகன் ராமசாமி, 51; அரசு பஸ் கண்டக்டர். கடந்த 5ம் தேதி மதியம் 1.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ராமசாமி மற்றும் அவரது மனைவி அலமேலுவும் வெளியே சென்றனர்.
பிற்பகல் 3:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.
ரூ.2 கோடி மோசடி செய்த முன்னாள் பேராசிரியர் கைது
சென்னை:: தனியார் வங்கியில் உதவி மேலாளர் வேலை வாங்கித் தருவதாக, 2 கோடி ரூபாய் மோசடி செய்த, தனியார் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஸ்ரீ நகர், அய்யர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மாறன், 45; தனியார் கல்லுாரி முன்னாள் பேராசிரியர்.
இவர், 2015 - 16ல், சென்னை மதுரவாயலில் உள்ள கல்லுாரியில் பணிபுரிந்தார். அப்போது, அதே கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிந்த, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பட்டாபிராமன், 66, என்பவருடன் நட்பாக பழகினார்.
பட்டாபிராமனிடம், 'நான் கேரளாவிலும் வேலை பார்த்துள்ளேன். தனியார் வங்கி அதிகாரிகள் என் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளனர்.
'அவர்கள் வாயிலாக, உங்களின் இரு மகன்களுக்கு, தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை வாங்கி தருகிறேன்' என்று கூறியுள்ளார். இதற்காக, பட்டாபிராமனிடம், 2 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பட்டாபிராமன் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் விசாரித்து, மாறனை கைது செய்தனர்.
போலி சி.எஸ்.ஆர்., வழங்கிய போலீஸ்காரர் மீது வழக்கு
சென்னை: செங்கல்பட்டு, தையூரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 65. இவர், சென்னை, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், தன் நில பத்திரம் காணாமல் போனதாக, சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.
நேற்று காவல் நிலையம் வந்த லட்சுமணனுக்கு, போலீசார் சார்பில் வழங்கப்பட்ட புகாருக்கான சி.எஸ்.ஆர்., எனும் சமூக பதிவேடு ரசீது எண் இல்லை எனவும், அதை வழங்கும்படி உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனிடம் கேட்டு உள்ளார்.
உடனே தமிழ்செல்வன், சி.எஸ்.ஆர்., பதிவுகளை ஆய்வு செய்தபோது, லட்சுமணனுக்கு சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்ட ரசீது போலியானது என்பதும், பணியில் இருந்த புதுப்பேட்டை ஆயுதப்படைக் காவலர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் வழங்கியதும் தெரியவந்தது.
இது குறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் காவலர் விஜயகுமார் மீது புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், லட்சுமணன் மகன் குணசீலனும், காவலர் விஜயகுமாரும் நண்பர்கள்.
குணசீலன் நில பத்திரம் காணாமல் போனது போன்று சி.எஸ்.ஆர்., வேண்டும் எனக்கேட்டதால், விஜயகுமார் போலியான சி.எஸ்.ஆர்., ரசீது தயாரித்து வழங்கியது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் விஜயகுமார் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்
இந்திய நிகழ்வு
.அமலாக்க துறையினர் மீது மீண்டும் தாக்குதல் மேலும் ஒரு திரிணமுல் காங்., நிர்வாகி கைது
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பாக, ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த பிரமுகரை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்கான் என்ற பகுதியைச் சேர்ந்தவர், சங்கர் ஆதியா.
ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த இவர், போங்கான் நகராட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில், ரேஷன் முறைகேடு தொடர்பாக, சங்கர் ஆதியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், நேற்று முன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
![]() |
இந்த சோதனைகளில், 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 17 மணி நேர சோதனைக்கு பின், நேற்று காலை, சங்கர் ஆதியாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக, கடந்த ஆண்டு மாநில அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெருக்கமான சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டுள்ளார்.
சங்கர் ஆதியா கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த திரிணமுல் காங்., தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
மேலும் அவர்களது வாகனங்கள் மீது கற் களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, திரிணமுல் காங்., தொண்டர்கள் மீது தடியடி நடத்தி, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கூட்டத்தை கலைத்தனர்.
தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், சோதனைக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது, நேற்று முன்தினம் திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதே போன்றதொரு சம்பவம் போங்கானில் அரங்கேறி உள்ளது.
நிலைமை சீராக உள்ளது'
மேற்கு வங்கத்தின், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ் காலி என்ற இடத்தில் உள்ள திரிணமுல் காங்., நிர்வாகி ஷேக் ஷாஜகானின் வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.அப்போது அவர்களை திரிணமுல் காங்., தொண்டர்கள் தாக்கியதில், மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், சிகிச்சை பெற்று வரும் மூன்று பேரின் நிலைமை சீராக இருப்பதாகவும், இருவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தலையில் காயம்அடைந்த அதிகாரிக்கு மட்டும் தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவரும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நிகழ்வு
வங்கதேசத்தில் ரயிலுக்கு தீ எதிர்க்கட்சியினர் கைது
டாக்கா: வங்கதேசத்தில், பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிரமுகர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில், ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இங்கு, இன்று பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்துள்ளது. 'ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது' என, அக்கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இந்நிலையில், நம் நாட்டின் மேற்கு வங்கத்தின் எல்லையில் அமைந்துள்ள, ஜெசூர் மாவட்டத்தின் பெனாபோல் நகரத்தில் இருந்து, நேற்று முன்தினம், 292 பயணியருடன், பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இரவு 9:00 மணி அளவில், டாக்காவில் உள்ள கோபிபாக் பகுதியில் ரயில் வந்த போது, நான்கு பெட்டிகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதில் ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில், இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக எதிர்க்கட்சியான பி.என்.பி.,யின் முக்கிய நிர்வாகிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, பி.என்.பி., அறிவித்ததில் இருந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.