2 ரூபாய்க்கு இட்லி தந்து அன்னபூரணியாக திகழும் சாவித்ரம்மா
2 ரூபாய்க்கு இட்லி தந்து அன்னபூரணியாக திகழும் சாவித்ரம்மா
2 ரூபாய்க்கு இட்லி தந்து அன்னபூரணியாக திகழும் சாவித்ரம்மா
ADDED : பிப் 24, 2024 10:58 PM

மைசூரில் தினக்கூலி தொழிலாளர்கள், ஏழைகளுக்கு 15 ஆண்டுகளாக, 2 ரூபாய்க்கு இட்லி வழங்கி, 'அன்னபூரணியாக' திகழ்கிறார் சாவித்ரம்மா.
மைசூரு மாவட்டம், ஹூன்சூரு நகரைச் சேர்ந்தவர் சாவித்திரம்மா. 'இட்லி' சாவித்திரம்மா கடை எங்கு உள்ளது என்று கேட்டாலே, அப்பகுதியினர் கூறிவிடுகின்றனர். அந்தளவுக்கு அப்பகுதியில் ஏழை, கூலித் தொழிலாளர்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளார்.
அங்கு சென்றால், அவரின் கடை முன் கூலித் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு 2 ரூபாய்க்கு இட்லி வழங்குவதே காரணம். இதனாலேயே இவரின் கடை முன் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா தொற்றுபரவும் வரை, 15 ஆண்டுகளாக 1 ரூபாய்க்கு மட்டுமே இட்லி விற்பனை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து சாவித்திரம்மா கூறியதாவது:
தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை 'இட்லி மனே' முன் மக்கள் வரிசையில் நிற்கின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நடுத்தர மக்கள், நடைபயிற்சி மேற்கொள்வோர், பள்ளி மாணவர்களும் வர துவங்கி உள்ளனர்.
என் அண்ணன் கொடுத்த சிறு கடையில் தனியாக வசித்து வருகிறேன். விவசாய தொழிலாளர்கள், மரம் அறுக்கும் தொழிலாளர்கள், அரசு பணியாளர்கள் உட்பட பலரும் இங்கு வருகின்றனர்.
குறைந்த விலையில் இட்லி கொடுத்தாலும் சுவையில் குறைவில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுவது பெருமை அளிக்கிறது.
விவசாய கூலித் தொழிலாளியாக இருந்த நான், உணவுக்காக கூலித் தொழிலாளர்கள் போராடுவதைக் கண்டு வேதனை அடைந்தேன். மலிவு விலையில் அவர்களின் வயிற்றை நிரப்ப முடிவு செய்தேன். தினமும் 1,500 இட்லி விற்பனையாகிறது.
சில சமயம் பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக வழங்குகிறேன். இந்த கடையை நானே நிர்வகிப்பதால் செலவும் குறைவு. சுய தொழில் என்பது சுயமரியாதை வாழ்க்கைக்கு திருப்தி அளிக்கும் அளவுக்கு பணம் சம்பாதிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹோட்டல்கள், பாஸ்ட் புட் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் இட்லி, இங்கு மட்டும் எப்படி கட்டுப்படி ஆகிறது என்ற சந்தேகம் எழுலாம்.
இவர் தினமும் 2,300 முதல் 2,500 ரூபாய் முதலீடு செய்கிறார். பத்து கிலோ அரிசி, இரண்டு கிலோ மசாலாவை 30 ரூபாய்க்கு வாங்குகிறார். பருப்பு, கீரை, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வாங்குகின்றனர். சமையல் எரிவாயு சிலிண்டரை தனியாரிடம் 1,300 ரூபாய்க்கு வாங்குகிறார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 ரூபாய் மட்டுமே லாபம் சம்பாதிக்கிறார்.
இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தன் மகளுக்கும் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
- நமது நிருபர் -.