விலங்குகளை பலியிட்டு யாகமா? சிவகுமார் புகார் குறித்து விசாரணை
விலங்குகளை பலியிட்டு யாகமா? சிவகுமார் புகார் குறித்து விசாரணை
விலங்குகளை பலியிட்டு யாகமா? சிவகுமார் புகார் குறித்து விசாரணை
ADDED : ஜூன் 01, 2024 06:54 AM

பெங்களூரு: 'கேரளாவில் கர்நாடக அரசுக்கு எதிராக, விலங்குகளை பலியிட்டு, அகோரிகளை வைத்து சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டுள்ளது' என அம்மாநில துணை முதல்வர் சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதை மறுத்துள்ள கேரள அமைச்சர் பிந்து, இது குறித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சிவகுமார் துணை முதல்வராக உள்ளார். இந்நிலையில், 'கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு எதிராக கேரளாவில் அகோரிகளை வைத்து பறவைகள், விலங்குகளை பலியிட்டு சத்ரு பைரவி யாகம் நடத்தப்பட்டுள்ளது' என சிவகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: முதல்வர் சித்தராமையா மற்றும் எனக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் சிலர் 'சத்ரு பைரவி' யாகம் நடத்தியுள்ளனர். கேரளாவின் ராஜராஜேஸ்வரி கோவிலின் அருகில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இந்த யாகம் நடத்தப்பட்டது. இதை யார் நடத்தியது? யார் யார் இந்த யாகத்தில் பங்கேற்றனர் என்பது குறித்து தெரியும். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை ஒழித்துக் கட்டவே இந்த யாகம் நடத்தப்பட்டது.
இதை அகோரிகளே நடத்தி இருக்கின்றனர். இது தொடர்பாக நம்பத்தகுந்த தகவல் என்னிடம் உள்ளது. கேரளாவில் மாந்திரீக சடங்குகள், யாகங்கள் நடத்தியவர்களுக்கு பின்னால் இருந்தவர்கள் அது குறித்த தகவல்களை அளித்துள்ளனர். கர்நாடக அரசியலைச் சேர்ந்தவர்கள்தான், இந்த யாகத்தை நடத்தியுள்ளனர். எங்களுக்கு கடவுளின் ஆசி இருக்கிறது.
நாள்தோறும் கடவுளை வணங்கிவிட்டு தான் எந்த செயலையும் செய்வேன். எனக்கு கடவுளின் பாதுகாப்பு இருப்பதால், இந்த யாகமெல்லாம் ஒன்றும் செய்யாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துணை முதல்வர் சிவகுமாரின் குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள மாநில சமூக நீதி அமைச்சர் பிந்து, சிவகுமாரின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
''நாட்டின் பிற பகுதிகளில் சமூகத்தை இருண்ட யுகத்துக்கு இழுக்கும் முயற்சியாக, இதுபோன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. ''ஆனால், கேரளாவில் இதுபோன்ற சம்பவங்களுக்கு வாய்ப்பில்லை. இருப்பினும், சிவகுமார் கூறியதுபோல் இதுபோன்ற யாகங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,'' என, அவர் தெரிவித்தார்.