ரூ.50 லட்சம் இழப்பீடு, இலவச வகுப்புகள்: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் அறிவிப்பு
ரூ.50 லட்சம் இழப்பீடு, இலவச வகுப்புகள்: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் அறிவிப்பு
ரூ.50 லட்சம் இழப்பீடு, இலவச வகுப்புகள்: ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்கள் அறிவிப்பு
ADDED : ஆக 03, 2024 06:18 AM

புதுடில்லி : டில்லியில், ஜூலை 27ல் கொட்டி தீர்த்த கனமழையால், பழைய ராஜேந்திர நகரில் செயல்பட்ட ராவ் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தின் கீழ் தரைத்தளத்திற்குள் வெள்ளம் புகுந்தது. அப்போது அங்கிருந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த மையத்திற்கு சீல் வைக்கப்பட்டதோடு, டில்லியின் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக இயங்கிய, 10க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
பயிற்சி மையங்கள் மற்றும் டில்லி நிர்வாகத்தை கண்டித்து, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், நேற்றும் ஆறாவது நாளாக தொடர்ந்தது. இந்நிலையில், ராவ் பயிற்சி மையத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக, அந்த பயிற்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர தலா, 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக, வஜிராம் மற்றும் ரவி இன்ஸ்டிடியூட், த்ரிஷ்டி ஐ.ஏ.எஸ்., - நெக்ஸ்ட் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ்., ஆகிய பயிற்சி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதே போல், ஜூலை 22ல், படேல் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு படித்த நிலேஷ் ராய் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்குவதாக, த்ரிஷ்டி ஐ.ஏ.எஸ்., மற்றும் ஸ்ரீராம் ஐ.ஏ.எஸ்., ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதற்கிடையே, ராவ் பயிற்சி மையத்தில் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றி, டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.