'ரோபோட்டிக்' பாடம் கட்டாயம் கேரள பள்ளிகளில் புதுமை
'ரோபோட்டிக்' பாடம் கட்டாயம் கேரள பள்ளிகளில் புதுமை
'ரோபோட்டிக்' பாடம் கட்டாயம் கேரள பள்ளிகளில் புதுமை
ADDED : மே 18, 2025 11:22 PM

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பில் படிக்கும் 4.30 லட்சம் மாணவர்களுக்கு, ரோபோட்டிக் பாடம் கற்றுத்தரப்பட உள்ளது. இதன் வாயிலாக, ரோபோட்டிக் கல்வியை கட்டாயமாக்கிய முதல் மாநிலமாக கேரளா சாதனை படைக்கிறது.
கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு வரும் கல்வியாண்டின் துவக்கமான ஜூன் 2 முதல், 10ம் வகுப்பு படிக்கும் 4.30 லட்சம் மாணவர்களுக்கு ரோபோட்டிக் பாடம் கற்றுத்தரப்படுகிறது. இதற்காக, மாநிலம் முழுதும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு 29,000 ரோபோ கிட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 9,900 ஆசிரியர்களுக்கும் ரோபோட்டிக் கல்வியை கற்றுத் தருவதற்கான முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கேரள பொதுக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
கேரள மாணவர்களுக்கான ஐ.டி., கிளப் எனப்படும், 'லிட்டில் கைட்ஸ்' வாயிலாக சோதனை முறையில் துவங்கப்பட்ட, 'ரோபோட்டிக் கல்வி' தற்போது, அனைத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
ரோபோக்களுக்கான, ஐ.ஆர்., சென்சார், சர்க்யூட், கம்ப்யூட்டர் புரோகிராமிங், எலக்ட்ரானிக் கட்டுப்பாடு' உள்ளிட்டவை கற்றுத் தரப்படும்.
'செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்கும், 'ஹோம் ஆட்டோமேஷன்' அமைப்புகளை மாணவர்கள் உருவாக்குவர்.
பள்ளிகளுக்கு கூடுதலாக ரோபோ கிட்டுகள் தேவைப்பட்டால் அனுப்பி வைக்கப்படும். தற்போது, மலையாளம், ஆங்கிலம், தமிழ், கன்னடம் மொழிகளில் மாணவர்களுக்கான ரோபோட்டிக் கல்வி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கேரள கல்வித் துறையின் தொழில் நுட்பப் பிரிவு தலைமை செயல் அதிகாரியும், பாடநுால் கழக தலைவருமான அன்வர் ஸதாத் கூறுகையில், ''ஏற்கனவே, 7ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பாடத்தை கற்றுக் கொடுத்ததில் பெற்ற வெற்றியின் தொடர்ச்சியாக, தற்போது, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
''இது தேசிய அளவிலான சாதனை. 8, 9, 10ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களிலும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஜூலையில், ஆசிரியர்களுக்கு முழு அளவிலான கணினி கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்,'' என்றார்.