ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மிர்ஜி ம.ஜ.த.,வில் ஐக்கியம்
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மிர்ஜி ம.ஜ.த.,வில் ஐக்கியம்
ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மிர்ஜி ம.ஜ.த.,வில் ஐக்கியம்
ADDED : பிப் 05, 2024 11:11 PM

பெங்களூரு: ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஜோதி பிரகாஷ் மிர்ஜி, ம.ஜ.த.,வில் இணைந்தார்.
கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரி ஜோதி பிரகாஷ் மிர்ஜி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் உட்பட பல்வேறு பதவிகளை நிர்வகித்தவர்.
இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, ஜோதி பிரகாஷ் மிர்ஜி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஜோதி பிரகாஷ் மிர்ஜி, உலக வீர சைவ லிங்காயத் கூட்டமைப்பு தலைவராக பதவி வகிக்கிறார். 2018 சட்டசபை தேர்தலில், லிங்காயத் தலைவர்களுக்கு 'சீட்' கொடுக்க வேண்டும் என, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்களை ஜோதி பிரகாஷ் மிர்ஜி வலியுறுத்தினார்.
பா.ஜ.,வில் இணைவார் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாநில ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, இளைஞர் அணி தலைவர் நிகில், மாநில முன்னாள் தலைவர் எச்.கே.குமாரசாமி முன்னிலையில், நேற்று ம.ஜ.த.,வில் இணைந்தார்.
அவர் கூறியதாவது:
எந்த தேர்தலிலும் போட்டியிட, நான் ஆலோசிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து, நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
சமுதாய வளர்ச்சிக்காக, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால்,ஒரே தொகுதியில் இருக்க வேண்டி வரும்.
பிறப்பில் இருந்தே, நான் புலி. போலீஸ் துறையில் இருந்த போது, துப்பாக்கி சூடு, தடியடி நடத்தியுள்ளேன். துபாயில் பதுங்கியிருந்த தாவூத் இப்ராகிம் கூட்டாளிகளை பிடித்து, அழைத்து வந்தேன். துறையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும், நான் புலியாக இருக்கிறேன்.
அனைத்து தொகுதிகளிலும், உள்ளூர் தலைவர்களுக்கு சீட் தரும்படி, மூன்று கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என, கூட்டம் நடத்தி முடிவு செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.