லாபத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரம் 14 வயது சிறுவனை கொன்ற உறவினர்
லாபத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரம் 14 வயது சிறுவனை கொன்ற உறவினர்
லாபத்தில் பங்கு கேட்டதால் ஆத்திரம் 14 வயது சிறுவனை கொன்ற உறவினர்
ADDED : செப் 23, 2025 01:37 AM

காஜியாபாத்: 'கிரிப்டோ கரன்சி' முதலீட்டில் கிடைத்த லாபத்தில் பங்கு கேட்டதால், 14 வயது சிறுவனை உறவினர் ஒருவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் வசித்து வந்தவர் லக் ஷயா, 14. இவர் கடந்த 16ம் தேதி முதல் காணாமல் போனதால், பதறிப் போன உறவினர்கள் பல இடங்களில் தேடினர்; இறுதியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், உறவினரான யுவராஜ் என்கிற யாஷ் பிரஜாபதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, தடுப்பு காவலில் கைது செய்து துருவி துருவி விசாரணை நடத்திய போது தான், லக் ஷயாவை படுகொலை செய்ததாக யாஷ் ஒப்புக் கொண்டார்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதில் அதீத ஆர்வம் கொண்ட யாஷ், பணத்துக்காக அலைந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தன் மாமாவிடம் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அந்த தொகையை முதலீடு செய்துள்ளார். இதில் அவருக்கு கணிசமான லாபம் கிடைக்க, அவரது மாமா, லாபத்தில் தனக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த யாஷ், அவரது 14 வயது மகனான லக் ஷயாவை சினிமாவுக்கு கூட்டிச் செல்வதாக ஆசை வார்த்தை கூறி, டில்லியின் ப்ரீத் விஹார் தியேட்டருக்கு வருமாறு அழைத்துள்ளார். அவரை நம்பி லக் ஷயா சென்ற நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் லக் ஷயாவை அடித்து உதைத்தார்.
இதில் வலி தாங்காமல் துடிதுடித்து கீழே விழுந்த சிறுவன் மீது செங்கற்கள் வீசி படுகொலை செய்தார்.
பின்னர், 'வி3எஸ் மால்' என்ற தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துவிட்டு, ஏதும் தெரியாதது போல வீட்டிற்கு வந்தார். அங்கு சிறுவனை காணாமல் அனைவரும் தேடிய நிலையில், யாஷும் தேடுவது போல நாடகமாடியுள்ளார்.
'சிசிடிவி' காட்சிகள், 'மொபைல் டிராக்கிங்' மற்றும் யாஷின் நடவடிக்கைகளை கண்காணித்த அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், இந்த படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.