ஒரு நாள் சுற்றுலாவுக்கு ரங்கராயனதொட்டி ஏரி
ஒரு நாள் சுற்றுலாவுக்கு ரங்கராயனதொட்டி ஏரி
ஒரு நாள் சுற்றுலாவுக்கு ரங்கராயனதொட்டி ஏரி
ADDED : ஜன 11, 2024 03:52 AM

பெங்களூரில் உள்ள ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வாரத்தில் ஐந்து நாட்களும் கஷ்டப்பட்டு பணி செய்பவர்கள், மன அமைதிக்காக வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் எங்காவது, சுற்றுலா செல்வது விரும்புவர்.
அதிலும் ஒரு நாள் சுற்றுலா சென்று வரும் வகையில், திட்டம் வகுப்பர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது, ரங்கராயனதொட்டி ஏரி.
பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது ராம்நகர். அங்கிருந்து, 2 கி.மீ.,யில் போலப்பனஹள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு ரங்கராயனதொட்டி ஏரி உள்ளது. ராம்நகரில் இருந்து ஏரிக்கு செல்லும் சாலையின் இருபுறமும், பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது.
ஏரிப்பகுதியில் உள்ள மலை மீது ஏறி சென்று, உச்சியில் இருந்து ஏரியின் அழகை பார்க்க, பிரமிப்பாக இருக்கும். ஏரியில் படகு சவாரியும் நடக்கிறது.
குடும்பத்தினருடன் உற்சாகமாக படகில் சென்று, ஏரியை சுற்றி பார்த்து விட்டும் வரலாம். ஏரிக்கரையில் நின்று, மொபைல் போன்களில் 'செல்பி' எடுத்து கொள்வதிலும், சுற்றுலா பயணியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வண்ணமயமான மலர்களும், சுற்றுலா பயணியரை கவரும் வகையில் உள்ளன.
நடைபயிற்சியில் ஈடுபட விரும்புவர்கள், ஏரிக்கரையில் நடந்து சென்று, ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். ஏரியை சுற்றி மலையேற்றம் செல்லவும் சில இடங்கள் உள்ளன.
பெங்களூரில் இருந்து காரில் ஒன்றரை மணி நேரத்தில், ரங்கராயனதொட்டி ஏரிக்கு சென்று விடலாம். பஸ்சில் செல்பவர்கள் ராம்நகருக்கு சென்று, அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் செல்லலாம். ரயிலில் சென்றால் ராம்நகர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து செல்ல வேண்டும்
- நமது நிருபர் -.