மக்களை ராமர் கோவில் ஒருங்கிணைத்தது: மோடி
மக்களை ராமர் கோவில் ஒருங்கிணைத்தது: மோடி
மக்களை ராமர் கோவில் ஒருங்கிணைத்தது: மோடி
ADDED : ஜன 29, 2024 04:00 AM

புதுடில்லி: ''அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்தது. இதில், நம் நாட்டின் ஒருங்கிணைந்த சக்தி, கண்கூடாக தெரிந்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், 'மன் கீ பாத்' எனப்படும் 'மனதின் குரல்' என்ற ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
இந்தாண்டின் முதல் ஒலிபரப்பு நேற்று வெளியானது. அதில், பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
கண்கூடாக தெரிந்தது
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நேரத்தில் நாடு முழுதும் மக்கள் ராமர் குறித்த பஜனைகளைப் பாடினர்.
அனைவரின் எண்ணங்களும் ஒன்றாக இருந்தன. அனைவரும் ராமர் குறித்தே சிந்தித்தனர். அனைவரும் ராம நாமத்தை கூறினர். அவர்களுடைய மனங்கள், ராமரால் நிரம்பிஇருந்தது. நாடு முழுதும், ராம ஜோதியை ஏற்றி, தீபாவளியைப் போல் மக்கள் கொண்டாடினர்.
இந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம், கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்தது. இதில், நம் நாட்டின் ஒருங்கிணைந்த கூட்டு சக்தி கண்கூடாக தெரிந்தது.
ராம ராஜ்ஜியமே, நம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்தது. இதனால்தான், கும்பாபிஷேகத்தின்போது, கடவுளில் இருந்து தேசம், ராமரில் இருந்து ராஜ்ஜியம் என்று நாம் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டேன்.
நம் நாட்டின் ஒருங்கிணைந்த சக்தியே, நாட்டை வளர்ந்த நாடாக்கும் உறுதிமொழிக்கு அடிப்படையாகும். இந்த ஒருங்கிணைந்த சக்தி, நம்மை பல உச்சத்துக்கு இட்டுச் செல்லும்.
இந்தாண்டு பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப் பட்டோரில் பெரும்பாலானோர், மிகவும் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள்.
பெரிய அளவில் பிரபலம் இல்லாத அவர்கள், நம் நாட்டுக்காக சிறப்பான சேவைகளை புரிந்து வருபவர்கள். பத்ம விருதுகள் பெறுவோரை தேர்ந்தெடுக்கும் முறை, கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெண் சக்தி
நாட்டின் குடியரசு தின விழாவில், பெண் சக்தியே ஓங்கியிருந்தது. அணிவகுப்பில் பங்கேற்ற, 20 படைப்பிரிவுகளில், 11ல் அனைவரும் பெண்களே இருந்தனர்.
அலங்கார ஊர்திகள், கலைநிகழ்ச்சிகளிலும் பெண்களே அதிகம் பங்கேற்றனர். இந்த, 21ம் நுாற்றாண்டில், பெண்களின் வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே இந்தியா முன்னேற்றப் பாதையில் நடைபோடும்.
பலர் சமூக சேவைகள் வாயிலாக, வேறு சிலர் ராணுவத்தில் சேர்ந்து மற்றும் சிலர் மற்றவர்களுக்கு கற்பிக்கும் சேவையை செய்து, நாட்டுக்காக தங்களுடைய கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நேரத்தில் மறைவுக்குப் பின்னும், இந்த நாட்டுக்கு உதவ முடியும் என்பதை, உடல் உறுப்பு தானம் வாயிலாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரூபித்துள்ளனர். அந்தக் குடும்பங்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
மாற்று மருத்துவ முறையான ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகியவற்றில் நோய்களின் பெயர்கள், மருந்துகள் உள்ளிட்டவைக்கு பொதுவான பெயர்கள் இல்லாமல் இருந்தது.
இதை ஆயுஷ் அமைச்சகம் தற்போது வகைப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, ஒருவர் நாட்டின் எந்த ஒரு மூலையில் உள்ள மாற்று மருத்துவ முறை மருத்துவர்களிடம் சிகிச்சை பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.