ரத்தம் விற்பனைக்கல்ல கட்டணம் வசூலிக்க தடை
ரத்தம் விற்பனைக்கல்ல கட்டணம் வசூலிக்க தடை
ரத்தம் விற்பனைக்கல்ல கட்டணம் வசூலிக்க தடை
ADDED : ஜன 05, 2024 01:15 AM
புதுடில்லி, மருத்துவமனைகள், தனியார் ரத்த வங்கிகளில் ரத்தம் பெறுவதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக, இனி ரத்தத்துக்கு கட்டணம் வசூலிக்க தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நாடு முழுதும் உள்ள ரத்த மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அறுவை சிகிச்சை
தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ரத்த வங்கிகளில், 1 யூனிட் ரத்தம் பெற, 2,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.
தேவைப்படும் ரத்தத்துக்கு ஈடாக, நோயாளிகள் தரப்பில் இருந்து ரத்த தானம் செய்யப்பட்டால், இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தலசீமியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாதத்துக்கு இருமுறை ரத்த மாற்று செய்ய வேண்டிய நிலை உள்ளது.
மேலும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது.
இவர்கள், தங்களுக்கு தேவையான ரத்தத்தை பெறுவதற்கு அதிக தொகை வழங்க வேண்டி இருப்பது பெரும் சுமையாக உள்ளது. இவற்றுக்கு முடிவு கட்டும் விதமாக, ரத்தம் வழங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இது தொடர்பாக, தேசிய ரத்த மாற்று கவுன்சில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள், ரத்தத்துக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என கூறப்பட்டுள்ள அதே வேளையில், செயல்பாட்டு கட்டணங்களை வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனுமதி
அதாவது, 250 ரூபாய் முதல் 1,550 ரூபாய் வரை ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகளுக்கு ஏற்ப செயல்பாட்டு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரத்த பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்களுக்கு 400 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கலாம். ரத்தம் சம்பந்தமான கூடுதல் பரிசோதனைகளுக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேசிய தலசீமியா நல சங்க பொதுச் செயலர் டாக்டர் ஜே.எஸ்.அரோரா கூறியதாவது:
மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அடிக்கடி ரத்த மாற்று தேவைப்படும் நோயாளிகளின் பொருளாதார சுமையை இது வெகுவாக குறைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.