Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கன்னடர் முன்னுரிமை: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு

கன்னடர் முன்னுரிமை: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு

கன்னடர் முன்னுரிமை: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு

கன்னடர் முன்னுரிமை: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறுத்தி வைத்தது கர்நாடக அரசு

UPDATED : ஜூலை 18, 2024 11:39 AMADDED : ஜூலை 17, 2024 02:09 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு : கர்நாடகாவில் குரூப் சி மற்றும் டி பிரிவு பதவிகளில் 100 சதவீதம் கன்னடர்களை மட்டுமே வழங்கும் மசோதாவிற்கு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அமைச்சரவை முடிவு


Image 1295087

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் கர்நாடகாவில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இவர்களுக்கு மட்டுமே, நிர்வாக பதவிகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பதவிகளிலும் 75 சதவீதமும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும். விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது. இந்த மசோதா விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இம்மசோதாவிற்கு தொழில்துறையினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மூடப்படும்


Image 1295088

இது தொடர்பாக சுவர்ணா குழும மேலாண் இயக்குவர் பிரசாத் கூறுகையில்,

கர்நாடகாவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. திறமையானவர்கள் மற்றும் திறமையற்றவர்கள் அனைவரும் வேலை செய்ய விரும்புவது கிடையாது. இதனால் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அவர்களுக்கு அரசின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கிறது. இதனால், அவர்கள் வீடுகளில் அமர்ந்து கொண்டு வாழ்க்கையை அனுபவித்து, குடும்பத்தை நடத்துகின்றனர்.

அரசின் இந்த கட்டுப்பாடானது, உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலைகள் மீது திணிக்கப்பட்டால், அனைத்து உள்கட்டமைப்பு பணிகளை நிறுத்துவதுடன், தொழிற்சாலைகள் மூடப்படும். கன்னடர்கள் கிடைக்காவிட்டால், அதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் என அரசு சொல்லவில்லை. இங்கு திறமையான மற்றும் திறமையற்ற ஆட்கள் கிடைக்காத காரணத்தினால் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை கொண்டு வருகிறோம். இதனை அரசு புரிந்து கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

என்ன பயன்


Image 1295089

கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபரும், நன்கொடையாளருமான டிவி மோன்தாஸ் கூறியதாவது: வேலைகளில் கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பினால், உயர்கல்வியில் அதிக பணம் செலவு செய்யுங்கள். அவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். திறன் மேம்பாட்டில் அதிக பணம் செலவு செய்யுங்கள். இன்டர்ன்ஷிப், தொழிற்பயிற்சி திட்டங்களுக்கு அதிக பணம் செலவு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் திறமையானவர்களாக மாறுவார்கள். இம்மசோதாவால் மாறமாட்டார்கள். இதன் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? இவ்வாறு அவர் கூறினார்.

மசோதா நிறுத்தி வைப்பு


தொழில்துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கர்நாடக அரசு தனது முடிவில் திடீர் மாற்றம் செய்துள்ளது. இதன்படி புதிய மசோதாவை நிறுத்தி வைப்பது எனவும், இது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us