அன்று புகழ்ச்சி...! இன்று குற்றச்சாட்டா?: ஜெகன் மோகனை வறுத்தெடுக்கும் தெலுங்கு தேசம்
அன்று புகழ்ச்சி...! இன்று குற்றச்சாட்டா?: ஜெகன் மோகனை வறுத்தெடுக்கும் தெலுங்கு தேசம்
அன்று புகழ்ச்சி...! இன்று குற்றச்சாட்டா?: ஜெகன் மோகனை வறுத்தெடுக்கும் தெலுங்கு தேசம்
UPDATED : ஜூன் 18, 2024 05:16 PM
ADDED : ஜூன் 18, 2024 05:11 PM

அமராவதி: கடந்த 2019ம் ஆண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பாராட்டிய ஜெகன் மோகன், இன்று (ஜூன் 18) தேர்தலில் ஓட்டுச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும் எனக் கூறியது குறித்து தெலுங்கு தேச கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிறகு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குறை கூறி வருகின்றனர்.
குற்றச்சாட்டா?
இன்று (ஜூன் 18) எக்ஸ் சமூகவலைதளத்தில், ஜெகன் மோகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறையே
உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அல்ல. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலைநிறுத்த நாமும் அதை நோக்கி நகர வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மக்களுக்கு நம்பிக்கை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அன்று புகழ்ச்சி...!
கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போது, ‛‛ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த குளறுபடியும் இல்லை. ஓட்டுப்பதிவுக்கு முன்னர், கட்சியினர் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பரிசோதிப்பார்கள். ஓட்டுப்பதிவு ஜனநாயக முறைப்படி தான் நடக்கிறது.
வெற்றி பெற்றால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக இருக்கிறது. தோல்வி அடைந்தால் சரியில்லை என்று சந்திரபாபு கூறுவது சரியல்ல'' என ஜெகன் மோகன் கூறியிருந்தார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் தெலுங்கு தேச கட்சியினர் பகிர்ந்து, வெற்றி பெற்றால் சரி, தோல்வி அடைந்தால் சரியில்லையா என விமர்சனம் செய்துள்ளனர்.