போலீஸ் காவல்! பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வலுக்கு 7 நாட்கள்... சிறப்பு புலனாய்வு குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை
போலீஸ் காவல்! பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வலுக்கு 7 நாட்கள்... சிறப்பு புலனாய்வு குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை
போலீஸ் காவல்! பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வலுக்கு 7 நாட்கள்... சிறப்பு புலனாய்வு குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை
ADDED : ஜூன் 01, 2024 04:33 AM

பெங்களூரு : பாலியல் வழக்கில் கைதான எம்.பி., பிரஜ்வலை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. பிரஜ்வலிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதியின் ம.ஜ.த., - எம்.பி.,யாக இருக்கிறார்; தற்போது முடிந்த தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
இவர், சில பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த படங்கள், வீடியோக்கள் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து, அவர் ஜெர்மனி தப்பி சென்றார். அவர் மீது இரண்டு பலாத்கார வழக்குகள்; ஒரு பாலியல் தொல்லை வழக்கு பதிவானது.
ஜெர்மனியில் 34 நாட்கள் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் நேற்று முன்தினம் மாலை 4:11 மணிக்கு, ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்தில் இருந்து, பெங்களூருவுக்கு புறப்பட்ட லுாப்தான்சா விமானத்தில் கிளம்பினார். அந்த விமானம் நள்ளிரவு 12:45 மணிக்கு தரையிறங்கியது.
பின்பக்க வாசல்
விமானத்தில் இருந்து இறங்கிய பிரஜ்வலை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், குடியேற்ற அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்த பின்னர், சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை அதிகாலை 1:20 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது.
இதையடுத்து விமான நிலையத்தின் பின்பக்க வாசலில் நிறுத்தப்பட்டிருந்த, போலீஸ் ஜீப்பில் பிரஜ்வல் ஏற்றப்பட்டார். அங்கு இருந்து அரண்மனை மைதான சாலையில் உள்ள, சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். சி.ஐ.டி., அறையில் உள்ள அலுவலகத்தில் ஓய்வு எடுத்தார்.
நீதிபதி முன் ஆஜர்
நேற்று காலை பிரஜ்வலிடம், பலாத்கார வழக்கு குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். ஆனால் அவர் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறி உள்ளார். இதையடுத்து நேற்று மதியம் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில், பிரஜ்வலுக்கு உடல் பரிசோதனை நடந்தது. அவருக்கு உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிக்கை கிடைத்தது.
இதன்பின்னர் நிருபதுங்கா சாலையில் உள்ள, பெங்களூரு 42 வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி சிவகுமார் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி முன்பு கையை கட்டி பிரஜ்வல் பவ்வியமாக நின்று கொண்டு இருந்தார்.
அப்போது நடந்த வாதம் வருமாறு:
அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் அசோக் நாயக்: பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஏழைகள். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள். அவர்கள் மீது தன் அதிகாரத்தை காட்டி உள்ளார்.
வீடியோக்களில் இருப்பது, பிரஜ்வல் தான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
பிரஜ்வல் தொடர்பான வழக்கு, சர்வதேச அளவில் செய்தியாக உள்ளது. துாதரக பாஸ்போர்ட் ரத்தாகும் என்ற பயத்தில், ஜெர்மனியில் இருந்து வந்து உள்ளார். இதற்கு முன் இரண்டு முறை, விமான டிக்கெட் முன்பதிவு செய்து, பயணத்தை ரத்து செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண்களின் வீடுகளில் பிரச்னை ஏற்படுவதால், புகார் தெரிவிக்க அவர்கள் முன்வருவது இல்லை. பிரஜ்வல் மீதான அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.
அவரை 15 நாள் போலீஸ் காவலில், விசாரிக்க வேண்டி உள்ளது. இன்று ஒரு நாள் முடிந்து உள்ளது.
இன்னும் 14 நாட்கள் அவரை காவலில் விசாரிக்க வேண்டி உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர் சாதாரண நபர் இல்லை. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி., அவர் செய்த தவறுக்கு மரண தண்டனை அளிக்கும் பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பிரஜ்வல் வக்கீல் அருண்: ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 2 வரை, பிரஜ்வல் மீது எந்த பலாத்கார புகாரும் இல்லை. வீடியோ, புகைப்படங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரிக்கும் போது, அவர்கள் வாக்குமூலத்தில் கூறாததை, போலீஸ் தரப்பு சேர்க்கிறது. ஜாமினில் வர கூடிய வழக்கை, ஜாமினில் வெளியே வர முயாத வழக்காக மாற்றுகின்றனர். அரசு வக்கீல்கள் நியாயமாக செயல்படவில்லை.
என் மனுதாரர் மீது பதிவான பாலியல் தொல்லை வழக்கை, பலாத்கார வழக்காக மாற்றி உள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மனுதாரர் தயாராக உள்ளார். அவரை எதற்கு 15 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும். ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்தால் போதும்.
பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கவில்லை. அவரை தேடி சென்று, புகார் வாங்கி வந்து உள்ளனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், வரும் 6ம் தேதி வரை ஏழு நாட்கள், பிரஜ்வலை போலீஸ் காவலில் வைத்து, விசாரிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவரை சி.ஐ.டி., அலுவலகத்திற்கு அழைத்து சென்று, சிறப்பு புலனாய்வு குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
இன்ஸ்பெக்டரிடம் சீறிய பிரஜ்வல்
விமானத்தில் இருந்து இறங்கியதும், குடியுரிமை அலுவலகத்திற்கு பிரஜ்வலை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்து வந்தனர். குடியுரிமை அலுவலகத்தில் காத்திருந்த சிறப்பு புலனாய்வு குழுவினர், பிரஜ்வலை பார்த்ததும், அவர் அருகே சென்று, கையை பிடிக்க முயன்றனர்.
'என்னை கையை பிடித்து அழைத்து செல்ல வேண்டாம். நானே வருகிறேன்' என்று பிரஜ்வல் கூறி உள்ளார். சிறப்பு புலனாய்வு குழுவினருடன் நடந்து செல்லும் போது, ஏதோ சாதனை படைத்தது போல, டி ஷர்ட்டுக்குள் கையை விட்டு ஹாயாக நடந்து சென்றார்.
நேற்று காலை சிவாஜிநகர் பவுரிங் மருத்துவமனைக்கு, பிரஜ்வலை மருத்துவ பரிசோதனைக்கு, பெண் போலீசார் ஜீப்பில் அழைத்து சென்றனர். ஜீப்பில் இருந்து இறங்கியதும், பிரஜ்வலின் கையை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுமா ராணி முயன்றார். அப்போது அவரை கோபமாக பார்த்த பிரஜ்வல், 'நானே வருகிறேன். என் கையை பிடிக்க வேண்டாம். எரிச்சலாக உள்ளது' என்று சீறி உள்ளார்.
==========
நீதிபதி முன் கண்ணீர்
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, பிரஜ்வலிடம் உங்கள் பெயர் என்ன, உங்களை எப்போது கைது செய்தனர். எங்கு வைத்து கைது செய்தனர் என்று, நீதிபதி சிவகுமார் கேட்டார். இதற்கு பிரஜ்வல் சரியாக பதில் அளித்தார். விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழுவினர், உங்களை துன்புறுத்தினரா என்று, நீதிபதி கேட்டார்.
அதற்கு இல்லை என்று பிரஜ்வல் பதில் கொடுத்தார். ஆனால் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில், படுக்கை, கழிப்பறை வசதி சரியாக இல்லை என்று கண்ணீருடன் கூறினார். இதன்பின்னர் விசாரணையின் போது பிரஜ்வலை துன்புறுத்த கூடாது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
=============
டி - ஷர்ட் ரூ.10 ஆயிரம்?
பிரஜ்வலை கைது செய்த போது, அவர் டி - ஷர்ட், டிராக் சூட் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த டி - ஷர்ட் அமெரிக்காவின் 'அன்டர் ஆர்மர்' கம்பெனி தயாரிப்பு. இந்தியாவில் அந்த டி - ஷர்ட் விலை தள்ளுபடியுடன் 6,000 முதல் 7,000 ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அந்த டி - ஷர்ட்டை பிரஜ்வல் ஜெர்மனியில் வாங்கி உள்ளார். அங்கு அதன் மதிப்பு 10,000 ரூபாய் என்று கூறப்படுகிறது.
====================
சவுக்கு சங்கர் பாணியில்...
பிரஜ்வலை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கடந்த 18ம் தேதி கைது வாரன்ட் பிறப்பித்திருந்தது. அந்த வாரன்டை நிறைவேற்ற பெண்களை கொண்ட பிரிவினர் களமிறக்கப்பட்டனர்.
இது குறித்து எஸ்.ஐ.டி., வட்டாரங்கள் கூறியதாவது:
பிரஜ்வல் வருகைக்கு முன்னதாகவே அங்கு இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமன் டி பென்னேகர், சீமா லட்கர் தலைமையிலான மகளிர் போலீசார் முகாமிட்டிருந்தனர். பெங்களூரு விமான நிலையத்தில் எஸ்.ஐ.டி., பெண் அதிகாரிகளிடமே பிரஜ்வல் ஒப்படைக்கப்பட்டார்.
தன் பதவி, அதிகாரத்தை பயன்படுத்தி பெண்களை பலவந்தப்படுத்தினார் என்பதால், பெண்களாலேயே அவரை கைது செய்வதன் வாயிலாக, மற்ற பெண்களுக்கு தைரியம் அளிப்பது இதன் நோக்கம். அத்துடன், பிரஜ்வலை கைது செய்ய எந்த பெண் அதிகாரியும் பயப்படவில்லை என்பதை அவரால் பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உணர்த்தவும் ஒரு சமிக்ஞை செய்தி இது. இதற்காகவே பிரஜ்வலை கைது செய்ய பெண் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டனர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக பெண் போலீசார் பற்றி அவதுாறாக பேசியதால், யு - டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவரை கோவையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு, போலீஸ் வேனில் அழைத்து சென்ற போது, பாதுகாப்பு பணிக்கு பெண் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். இதுபோல பிரஜ்வலுக்கு பாடம் புகட்டவே, அவரை கைது செய்ய பெண் போலீசார் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
***
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, பிரஜ்வலிடம் உங்கள் பெயர் என்ன, உங்களை எப்போது கைது செய்தனர். எங்கு வைத்து கைது செய்தனர் என்று, நீதிபதி சிவகுமார் கேட்டார். இதற்கு பிரஜ்வல் சரியாக பதில் அளித்தார். விசாரணையின் போது சிறப்பு புலனாய்வு குழுவினர், உங்களை துன்புறுத்தினரா என்று, நீதிபதி கேட்டார்.
அதற்கு இல்லை என்று பிரஜ்வல் பதில் கொடுத்தார். ஆனால் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில், படுக்கை, கழிப்பறை வசதி சரியாக இல்லை என்று கண்ணீருடன் கூறினார். இதன்பின்னர் விசாரணையின் போது பிரஜ்வலை துன்புறுத்த கூடாது. அவருக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.