'ஆங்கில புத்தாண்டில் போலீஸ் பணிக்கு மக்கள் பாராட்டு'
'ஆங்கில புத்தாண்டில் போலீஸ் பணிக்கு மக்கள் பாராட்டு'
'ஆங்கில புத்தாண்டில் போலீஸ் பணிக்கு மக்கள் பாராட்டு'
ADDED : ஜன 03, 2024 07:39 AM

பெங்களூரு: ''ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சிறப்பாக பணியாற்றிய போலீசாரை மக்கள் பாராட்டுகின்றனர். இதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிவுரை வழங்கினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
கல்லுாரியில் இருந்தே புத்தாண்டு கொண்டாட்டத்தை பார்த்து வருகிறேன். இந்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. அசம்பாவிதம் நடக்காத வகையில் நேர்த்தியாக நடத்தப்பட்டது.
போலீஸ் அதிகாரிகள், பணியாளர்கள் ரத்த தானம், கண் தானம் செய்ததுடன், பள்ளிக்கு இனிப்புகள் வழங்கினர். ஆதரவற்ற குழந்தைகள், துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள், புத்தாண்டு வாழ்த்து கூறியது அர்த்தமுள்ளதாக இருந்தது.
மக்களும் அதையே விரும்புகின்றனர். இதனால் போலீஸ் துறை மீது நம்பிக்கையும், மரியாதையும் அதிகரிக்கும். இதை தொடர வேண்டும்.
கர்நாடகாவை போதையில்லா மாநிலமாக மாற்றுவது எனது முக்கிய குறிக்கோள். முதல்வரும் இதையே தெரிவித்தார். நகரில் பல ஆண்டுகளாக வசிக்கும் வெளிநாட்டினரை கண்காணித்து, போதையில்லா கர்நாடகா வளர்ச்சிக்கு செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
கர்நாடகத்தில் கலவரம் குறைந்து உள்ளது. குற்ற வழக்குகளில் அப்பாவிகள் சிக்குவதை கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நகரில் போக்குவரத்து பிரச்னை முன்பை விட குறைவாக உள்ளது. 50 சதவீதம் போக்குவரத்து பிரச்னை கட்டுக்குள் வந்துள்ளது.
அதிகாரிகள், ஊழியர்கள் தங்களின் அனுபவங்கள் குறித்த குறிப்புகள் தயாரித்து, கமிஷனரிடம் கொடுக்க வேண்டும்.
போலீஸ் துறையில், பெரும்பாலும் பட்டதாரி ஊழியர்கள் பணியாற்றுவது நல்ல வளர்ச்சி. அவர்கள் புதிதாக யோசித்து, உயர் அதிகாரிகளுக்கு அறிக்கையாக கொடுக்கலாம். இதன் மூலம் மாற்றங்களை கொண்டுவர வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.