பெங்., போக்குவரத்து நெருக்கடி கட்டுப்படுத்த 'ட்ரோன்' கேமரா
பெங்., போக்குவரத்து நெருக்கடி கட்டுப்படுத்த 'ட்ரோன்' கேமரா
பெங்., போக்குவரத்து நெருக்கடி கட்டுப்படுத்த 'ட்ரோன்' கேமரா
ADDED : ஜன 27, 2024 11:10 PM
பெங்களூரு: பெங்களூரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையை குறைக்க, 'ட்ரோன் கேமரா' பயன்படுத்த போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, போக்குவரத்து பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரும் கூட டில்லி, மும்பை போன்று டிராபிக் சிட்டியாகிறது. நகரில் 1 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
தினமும் நகரின் சாலைகளில், 70 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. இதனால், முக்கியமான சந்திப்புகளில், போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கிறது.
இதை கட்டுப்படுத்த 'ட்ரோன் கேமரா' பயன்படுத்த, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். நகரின் மார்க்கெட் சாலைகள், முக்கியமான சந்திப்புகளுக்கு இணைப்பு ஏற்படுத்தும் சாலைகளில் இயங்கும் வாகனங்களை கண்காணிக்கவும்;
சிறு சிறு சாலைகளில் வாகனங்கள் நிறுத்தியிருப்பதை அறியவும், சில முக்கிய சந்திப்புகளில், சிக்னல்களில் எந்த இடத்தில் அதிகமாக வாகனங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளவும் ட்ரோன் கேமரா உதவியாக இருக்கும்.
ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினால், இவற்றின் சுமூகமான போக்குவரத்துக்கு வசதி செய்யவும் அனுகூலமாக இருக்கும்.
மெஜஸ்டிக், எம்.ஜி., சாலை, ராஜ்பவன், சாளுக்யா சதுக்கம், துமகூரு சாலை, ஹெப்பால், கோரமங்களா, சில்க் போர்டு, மாரத்த ஹள்ளி, பெல்லந்துார் சந்திப்புகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்கும்.
தற்போது 10 ட்ரோன் கேமராக்கள், போக்குவரத்துப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.