நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி
நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி
நடுவானில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபர்: பயணிகள் அதிர்ச்சி

புதுடில்லி: பெங்களூருவில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானியின் அறைக்கதவை திறக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து உபியின் வாரணாசிக்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென விமானியின் அறையை (காக்பிட்) திறக்க முயன்றார்.
பொதுவாக இந்த அறையை யாரும் திறக்க முடியாது. திறக்க வேண்டும் என்றால் ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு விமானி அதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே கதவு திறக்கும். ஆனால், அதனை அறியாத பயணி அந்தக் கதவை திறக்க முயன்றார். விமானத்தை அவர் கடத்த முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தில் கதவை திறக்க விமானி அனுமதி வழங்கவில்லை.
கதவு திறக்க முடியாததை தொடர்ந்து அவரை ஊழியர்கள் இருக்கையில் அமர வைத்தனர். கழிவறை என நினைத்து கதவை திறக்க அந்தப் பயணி முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விமானம், வாரணாசியில் தரையிறங்கியதும் அந்த பயணியையும், அவருடன் வந்தவர்களையும் பிடித்த ஊழியர்கள் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இதன் பிறகு, கதவை திறக்க முயன்ற நபர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.