நம் எல்லை ஒன்று தான்; எதிரிகள் மூவர் ராணுவ துணை தலைவர் ராகுல் சிங் பேச்சு
நம் எல்லை ஒன்று தான்; எதிரிகள் மூவர் ராணுவ துணை தலைவர் ராகுல் சிங் பேச்சு
நம் எல்லை ஒன்று தான்; எதிரிகள் மூவர் ராணுவ துணை தலைவர் ராகுல் சிங் பேச்சு
ADDED : ஜூலை 04, 2025 11:56 PM

புதுடில்லி: “பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, அந்நாட்டுக்கு சீனா மற்றும் துருக்கி உதவி செய்தன. நமக்கு எல்லை ஒன்றுதான்; ஆனால் மூன்று எதிரிகள் இருந்தனர்,” என ராணுவ துணைத் தலைவர் துணைநிலை ஜெனரல் ராகுல் ஆர்.சிங் தெரிவித்துஉள்ளார்.
எப்.ஐ.சி.சி.ஐ., எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.
இதில், ராணுவ துணைத் தலைவர் துணைநிலை ஜெனரல் ராகுல் ஆர்.சிங் பங்கேற்று பேசியதாவது:
பாகிஸ்தானுக்கு எதிரான, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, அந்நாட்டில் உள்ள 21 பயங்கரவாத முகாம்கள் அடையாளம் காணப்பட்டன.
இதில், ஒன்பது முகாம்கள் மிகவும் பயங்கரமானதாக தெரிந்தன. இதையடுத்தே, அவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டது.
அதுவும் கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போர், நம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது.
இந்தப் போரில், பாகிஸ்தானுக்கு இரு நாடுகள் மிகவும் உதவின. இந்தியா - பாகிஸ்தான் சண்டையை, ஒரு நேரடி கள ஆய்வகமாக சீனா பயன்படுத்திக் கொண்டது.
பாகிஸ்தானுக்கு பலவிதமான ஆயுதங்களை வழங்கி, அதை நம்முடனான போரில் சீனா பயன்படுத்தி பார்த்தது. நம் நாட்டை சேதப்படுத்த, பாகிஸ்தானை பினாமியாக சீனா பயன்படுத்தியது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 81 சதவீதத்துக்கும் அதிகமான ராணுவ தளவாடங்களை, சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் நாட்டு படைகள் எங்கெங்கு உள்ளன என்ற விபரங்களை சீனா, பாகிஸ்தானுக்கு நேரடியாக வழங்கியது. இந்தப் போரில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு உதவியதை அந்நாட்டு அதிபர் எர்டோகனே ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்நாட்டு ட்ரோன்கள் இந்த தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தன. நம் நாட்டின் எல்லை ஒன்றுதான் என்ற போதிலும், மூன்று எதிரிகளுடன் நாம் போரிட வேண்டி இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.