மருத்துவ கல்லுாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலம்!: ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற 34 பேர் சிக்கினர்
மருத்துவ கல்லுாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலம்!: ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற 34 பேர் சிக்கினர்
மருத்துவ கல்லுாரிகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் அம்பலம்!: ஒப்புதலுக்கு லஞ்சம் பெற்ற 34 பேர் சிக்கினர்
ADDED : ஜூலை 05, 2025 12:02 AM

புதுடில்லி: மருத்துவக் கல்லுாரிகளை நிர்வகிக்கும் ஒழுங்குமுறை கட்டமைப்பில், ஊழல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ கமிஷன் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, 'நெட்வொர்க்'கை சி.பி.ஐ., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உட்பட 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் நயா ராய்ப்பூரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை வழங்க, 55 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், தேசிய மருத்துவ கமிஷனைச் சேர்ந்த மூன்று டாக்டர்கள் அடங்கிய எட்டு பேரை, சமீபத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் எட்டு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள், இடைத்தரகர்கள் வாயிலாக மருத்துவக் கல்லுாரிகளின் பிரதிநிதிகளுக்கு சில ரகசிய கோப்புகள், ஆவணங்களை அளித்துள்ளனர். இதற்கு கைமாறாக பல லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது.
இடைத்தரகர்களுடன் கூட்டு சேர்ந்து மருத்துவக் கல்லுாரிகளில், தேசிய மருத்துவ கமிஷன் சார்பில் அந்த அதிகாரிகள் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லுாரிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, எதுவும் தெரியாதது போல் அங்கு சென்று அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், என்ன மாதிரியான ஆய்வு நடக்கப் போகிறது என்பதையும் அவர்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளனர். இதனால், கல்லுாரியின் உள்கட்டமைப்புகளை தற்காலிகமாக உருவாக்கியதுடன், போலியாக பல பேராசியர்களையும் அவர்கள் கணக்கு காட்டி நற்சான்று பெற்றுள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களின் ஒழுங்குமுறை நிலை மற்றும் செயல்பாடு தொடர்பான முக்கியமான தகவல்கள், சில கல்லுாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கல்லுாரிகள் ஆய்வின் போது பல்வேறு ஏமாற்று வேலைகளும் அரங்கேறி உள்ளன.
சாதகமான அறிக்கையை பெற ஆய்வு செய்ய வரும் அதிகாரிகளுக்கு கல்லுாரி நிர்வாகங்கள் லஞ்சம் கொடுத்துள்ளன. இந்த மோசடியின் நெட்வொர்க் கும்பலை கண்டுபிடித்துள்ளோம். இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் பூனம் மீனா, தரம்வீர், பியூஷ் மல்யன், அனுப் ஜெய்ஸ்வால், ராகுல் ஸ்ரீவஸ்தவா, தீபக், மனிஷா, சந்தன் குமார் ஆகிய அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் தலைவர் டி.பி.சிங், கீதாஞ்சலி பல்கலை பதிவாளர் மயூர் ராவல், ராவத்புரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்டு ரிசர்ச் தலைவர் ரவிசங்கர் ஜி மஹாராஜ், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லுாரி தலைவர் சுரேஷ் சிங் படோரியா உட்பட, 34 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.