சிருங்கேரி மடத்தில் உடை கட்டுப்பாடு அமல் உத்தரவு
சிருங்கேரி மடத்தில் உடை கட்டுப்பாடு அமல் உத்தரவு
சிருங்கேரி மடத்தில் உடை கட்டுப்பாடு அமல் உத்தரவு
ADDED : ஜன 29, 2024 07:06 AM

சிக்கமகளூரு: சிருங்கேரி சாரதா மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு உடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.
கர்நாடகாவில், வரலாற்று மற்றும் புராண பிரசித்தி பெற்ற, பல கோவில்கள் உள்ளன. இங்கு நாடு, வெளிநாடுகளின் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
புராதன கோவில்களுக்கு வரும் சிலர், குறிப்பாக வெளிநாட்டவர், ஜீன்ஸ், பர்முடா, முழங்கால் தெரியும்படி குட்டையான உடைகள் அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுகிறது. அனைத்து கோவில்களிலும், உடைக் கட்டுப்பாடு அமல்படுத்தும்படி, ஹிந்து அமைப்பினர் வலியுறுத்துகின்றனர்.
இதுதொடர்பாக, அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து கொள்ளும்படி அரசு கூறியது. இதன்படி பெங்களூரின் பனசங்கரி, ஹம்பியின் விருபாக்ஷேஸ்வரா உட்பட பல்வேறு கோவில்களில் பக்தர்களுக்கு உடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது.
தற்போது சிக்கமகளூரு, சிருங்கேரியில் உள்ள பிரசித்தி பெற்ற சாரதா மடத்தில் பக்தர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மடத்தின் சாரதாம்பிகை, குருபவனின் ஜகத்குருவை தரிசிக்க வரும் பக்தர்கள், நாகரீகமாக உடை அணிந்து வர வேண்டும். ஆண்கள் வேட்டி, சட்டை, பெண்கள் சேலை அணிந்து வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.