உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் ஜெயபிரகாஷ் ஹெக்டேவுக்கு எதிர்ப்பு
ADDED : பிப் 12, 2024 06:34 AM

உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக ஜெயபிரகாஷ் ஹெக்டே போட்டியிடுவதற்கு, கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா. இவர் உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதி எம்.பி., ஆவார். கடந்த 2014, 2019 தேர்தல்களில் இங்கு வென்றுள்ளார். வரும் தேர்தலிலும் அவரே வேட்பாளராக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் அமைச்சர் பிரமோத் மத்வராஜ், இம்முறை தனக்கு 'சீட்' வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்களிடம் கேட்டு வருகிறார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, சரியான வேட்பாளர்கள் இன்னும் கிடைக்கவில்லை. கடந்த 2012ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, ஜெயபிரகாஷ் ஹெக்டே வெற்றி பெற்றார்.
தற்போது கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கும், குழுவின் தலைவராகவும் உள்ளார். இந்த மாதத்துடன் அவர் பதவிக்காலம் முடிய உள்ளது.
முதல்வர் சித்தராமையாவுக்கு, ஜெயபிரகாஷ் ஹெக்டே மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. இதனால் அவரையே உடுப்பி - சிக்கமகளூரு தொகுதி வேட்பாளராக நிறுத்த ஆசைப்படுகிறார்.
ஆனால், ஜெயபிரகாஷ் ஹெக்டேயை நிறுத்துவதற்கு, காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேறு யாரையாவது நிறுத்த வேண்டும் என்றும், தலைவர்களிடம் கூறிவருகின்றனர்.
- நமது நிருபர் -