எங்கள் வெற்றியில் எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை: பிரதமர் மோடி பேச்சு
எங்கள் வெற்றியில் எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை: பிரதமர் மோடி பேச்சு
எங்கள் வெற்றியில் எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை: பிரதமர் மோடி பேச்சு
ADDED : பிப் 12, 2024 12:33 AM

ஜாபுவா : ''வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியில், எதிர்க்கட்சிகளுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மத்திய பிரதேசத்தில், 7,550 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பழங்குடியினர் மகாசபை நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இங்கு நான் லோக்சபா தேர்தலுக்கு பிரசாரம் செய்வதற்காக வரவில்லை. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அளித்த பெரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் சேவகனாக வந்துள்ளேன்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி எனப்படும், 'டபுள் இன்ஜின்'அரசுகள் அமைந்துள்ளன. இதனால், மாநிலத்தில் இரட்டை வேகத்தில் வளர்ச்சிப் பணிகள் நடக்கின்றன.
அதற்கு சிறந்த உதாரணமாகத் தான், 7,550 கோடி ரூபாய் திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., குறைந்தபட்சம், 370 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கும் இதில் அபார நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வரும் தேர்தலில், இந்த வெற்றியை உறுதி செய்ய, ஒவ்வொரு பூத்திலும் முந்தைய தேர்தலைவிட, பா.ஜ.,வுக்கு, குறைந்தபட்சம் 370 ஓட்டுகள் அதிகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதிலும், ஏழைகள், விவசாயிகள், பழங்குடியினர் நலன்களை, காங்கிரஸ் புறக்கணிந்து வந்துள்ளது. ஆனால், தேர்தல் நடக்கும்போது மட்டும் கிராமங்களுக்கு செல்வர்.
தற்போது தோல்வி நிச்சயம் என்பது தெரிந்துவிட்டதால், பிரித்தாளும் சூழ்ச்சியில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.